ஊழியர்க்கு உதவச் சந்தை நுண்ணறிவு அவசியம்: இங் சீ மெங்

ஊழியர்க்கு உதவச் சந்தை நுண்ணறிவு அவசியம்: இங் சீ மெங்

2 mins read
cee5eeaa-a238-4148-b6bb-d36190c76984
செயற்கை நுண்ணறிவின் தாக்கத்துக்கு இடையே ‘வேலைகளற்ற வளர்ச்சி’ என்ற தீர்மானத்தைத் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் பொருளியலில் ஊழியர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்புகளைக் கைப்பற்ற சிங்கப்பூர், வேலைச் சந்தை நுண்ணறிவை உருவாக்கவேண்டும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறியுள்ளார்.

‘வேலைகளற்ற வளர்ச்சி’ என்ற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் திரு இங் செவ்வாய்க்கிழமை (மே 5) தாக்கல் செய்து பேசினார்.

வேலைச் சூழல் துரிதமாக மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் ஊழியர்களும் நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதாகத் திரு இங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் பல்வேறு துறைகளையும் ஊழியரணியையும் நிறுவனங்களையும் பிரதிபலிக்கும் நம்பகமான வேலைச் சந்தை நுண்ணறிவை சிங்கப்பூர் கொண்டிருப்பது அவசியம் என்று வலியுறுத்தினார் திரு இங்.

அதன் மூலம் எந்தெந்த வேலை வாய்ப்புகள் உருமாறும், எவை காணாமற்போகும் என்ற தெளிவான வழிகாட்டுதல் ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவை செயல்முறைப்படுத்தும் வணிகச் சங்கங்கள், வேலை மறுவடிவமைப்பு தொடர்பான நிறுவனத் தகவல்கள், உற்பத்தி, ஊழியர்களின் அக்கறையை அறிந்துள்ள தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் தரவுகளை ஒன்றிணைத்து சந்தை நுண்ணறிவை உருவாக்கலாம் என்றும் திரு இங் குறிப்பிட்டார்.

ஊழியர்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுடன் நிறுவனங்கள் உருமாறவேண்டும் என்று ஜாலான் காயு தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விரிவான ஆதரவு மூலம் செயற்கை நுண்ணறிவு வழிநடத்தும் உருமாற்றத்தால் கூடுதல் ஊழியர்கள் பயனடைவர் என்றார் அவர்.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதையும் திரு இங் வலியுறுத்தினார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் முதல் குழு தொடங்கப்பட்டதிலிருந்து, தற்போது 3,800க்கும் அதிகமான குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிய திரு இங், 300,000 ஊழியர்கள் அதன்மூலம் பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் திட்டத்தை நாடளவில் விரிவுபடுத்த புதிய முத்தரப்பு வேலைகள் மன்றத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனத்துடன் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் இணைந்து செயல்படவேண்டும் என்று திரு இங் பரிந்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்