வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு, சிங்கப்பூர் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச மாத ஊதியமான உள்ளூர் தகுதிச் சம்பளம் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) திருத்தங்களைக் காணும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) அன்று நாடாளுமன்றத்தில் பேசிய டாக்டர் டான், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு குறைந்த வாழ்நாள் ஊதியத்துடன் காலாண்டுக்கு ஒருமுறை பண உதவி வழங்கும் மூத்தோர் ஆதரவுத் திட்டம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.) கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறு கூறினார்.
“வரும் வரவுசெலவுத் திட்டத்தில், உள்ளூர் தகுதிச் சம்பளத்தில் மேலும் மேம்பாடுகள் இருக்கும்,” என்று டாக்டர் டான் கூறினார்.
உள்ளூர் தகுதிச் சம்பளம் கடைசியாக 2024ஆம் ஆண்டு $1,400லிருந்து $1,600 ஆக உயர்த்தப்பட்டது. நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் அந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான பெரிய வேலைநலன் வழங்கீடுகளுடன் அதிகரிப்பை அறிவித்தார்.
பிப்ரவரி 12ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றுவார்.
உள்ளூர் தகுதிச் சம்பளம் $1,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்தோர் ஆதரவுத் திட்டத்தின் உயர் அடுக்கு சலுகைகளுக்கான மாத வருமான வரம்பை $1,500 ஆக நிர்ணயிப்பதற்கான அரசாங்கத்தின் காரணம் என்ன என்று செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் அப்துல் முஹைமின் அப்துல் மாலிக் கேட்டார்.
மூத்தோர் ஆதரவுத் திட்டத்தின் வரம்பு தனிநபரின் மாதாந்தர வருமானத்தைக் குறிக்கவில்லை. மாறாக, அது மாதாந்தர தனிநபர் வீட்டு வருமானத்தைக் குறிக்கிறது என்று டாக்டர் டான் பதிலளித்தார்.
ஓய்வூதியத்தில் குடும்ப ஆதரவு மற்றும் வளங்கள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்டு உதவி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, திட்டத்தின் வழங்கீடுகள் வீட்டு வகை, மாதாந்தர தனிநபர் வீட்டு வருமானம் ஆகியவை மூலம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் ஊழியர்களுக்கு வெறும் பெயரளவிலான சம்பளத்தை மட்டும் வழங்காமல், அர்த்தமுள்ள வகையில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்வதற்கான வேறுபட்ட நோக்கத்திற்கு உள்ளூர் தகுதிச் சம்பளம் உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

