சிங்கப்பூர் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்க வேண்டிய குறைந்தபட்ச மாத ஊதியமான உள்ளூர்த் தகுதிச் சம்பளம் (Local Qualifying Salary) 1,600 வெள்ளியிலிருந்து 1,800 வெள்ளியாக உயர்த்தப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மனிதவள அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இதனை அறிவித்த அமைச்சர் டான் சீ லெங், குறைந்த வருமான ஊழியர்களுக்கான ஊதிய ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
“மனிதவள அமைச்சின் கொள்கைகள் நிறுவனச் செலவை அதிகரிப்பதாக நிறுவனங்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. முதலாளிகள் பலர் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அதனை நாங்கள் அறிந்துள்ளோம்,” என்று டாக்டர் டான் கூறினார்.
“அதே நேரத்தில் மற்றொரு கண்ணோட்டத்தையும் வழங்க விரும்புகிறேன். எங்களது ஊழியரணிக் கொள்கைகள் முக்கியமான சமூக நோக்கங்களை நிறைவேற்றுகின்றன,” என்றார் அவர்.
“ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடையவும் சமூகப் பிளவுகள் ஆழமாவதைத் தடுக்கவும் படிப்படியான சம்பள உயர்வு முறை (Progressive Wage Model) போன்ற திட்டங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன,” என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
புதிய அறிவிப்பு குறித்துப் பேசிய மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், இந்த மாற்றம் இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
சிங்கப்பூரின் தனித்துவமான அணுகுமுறை
நீடித்த ஊதிய உயர்வு பற்றிப் பேசிய திரு தினேஷ், குறைந்த சம்பள ஊழியர்களுக்கான தனித்துவமான அணுகுமுறையைச் சிங்கப்பூர் காலப்போக்கில் உருவாக்கியுள்ளதாகச் சுட்டினார்.
“குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களை உயர்த்த நாங்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தொழிற்சங்கங்களுடனும் முதலாளிகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். நம் சமூக ஒப்பந்தத்தின் ஆணிவேராக இந்த முயற்சிகள் உள்ளன. குறைந்த சம்பள ஊழியர்கள் வைக்கும் ஒவ்வோர் அடியுடன் சேர்ந்துசெல்வதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
படிப்படியான சம்பள உயர்வு, ஒன்பது துறைகளுக்கும் வேலைகளுக்கும் இடையே இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
படிப்படியான சம்பள உயர்வு முறைக்குப் பொருந்தாத உள்ளூர் ஊழியர்கள், உள்ளூர்த் தகுதிச் சம்பளத்தால் பயனடையக்கூடும். வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர்கள் குறைந்தது உள்ளூர்த் தகுதிச் சம்பளத்தையேனும் பெறவேண்டும் என்று திரு தினேஷ் கூறினார்.
மேலும், வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின் வழியாகக் குறைந்த ஊதிய ஊழியர்கள் கூடுதல் ஆதரவு பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் இதுவரை 1.1 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஒட்டுமொத்தமாக $12.7 பில்லியன் ஆதரவு பெற்றுள்ளனர்.
இதனிடையே, பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம், வேலைநலன் துணை வருமானத் திட்டத்திற்கான மாதாந்தர சம்பள வரம்பை உயர்த்த வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு, “சென்ற ஆண்டு அவ்வரம்பை 2,500 வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளிக்கு உயர்த்தினோம்,” என்று துணையமைச்சர் தினேஷ் பதிலளித்தார்.

