சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் கடந்த மார்ச் மாதம் மீண்டது.
கைக்கடிகாரங்கள், நகைகள் ஆகியவற்றின் விற்பனை ஆக அதிகமாக ஏற்றம் கண்டது.
அவை தொடர்பான சில்லறை வர்த்தகம் 13.5 விழுக்காடு அதிகரித்தது.
ஆண்டு அடிப்படையில் சில்லறை வர்த்தகம் 1.1 விழுக்காடு உயர்ந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அது 3.5 விழுக்காடு வீழ்ச்சி கண்டிருந்தது.
இந்தத் தகவல்களை சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை திங்கட்கிழமை (மே 5) வெளியிட்டது.
வாகன விற்பனையைச் சேர்க்காமல், சில்லறை வர்த்தகம் 0.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.
ஒப்புநோக்க, இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.5 விழுக்காடு சரிந்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் மாதத்தில் மொத்த சில்லறை வர்த்தகம் $4.3 பில்லியனாகப் பதிவானது.
இதில் இணையவழி விற்பனையின் பங்கு 13.4 விழுக்காடு.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இணையம் மூலம் விற்பனையின் பங்கு 12.3 விழுக்காடு மட்டுமே.
கணினி, தொலைத்தொடர்புச் சாதனங்களுக்கான ஒட்டுமொத்த விற்பனையில் இணையவழி விற்பனையின் பங்கு 50.5 விழுக்காடு.
மரக்கலன்கள், வீட்டுப் பொருள்கள் ஆகியவற்றுக்கான மொத்த விற்பனையில் இணையவழி விற்பனையின் பங்கு 32.8 விழுக்காடு.
பேரங்காடிகள் தொடர்பான விற்பனையைப் பொறுத்தவரை, இணையவழி விற்பனையின் பங்கு 13.1 விழுக்காடு.
சில்லறை வர்த்தகத் துறைக்கு உட்பட்ட துறைகளில் பாதி, மார்ச் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி கண்டன.
அழகு சாதனங்கள், மருத்துவப் பொருள்கள் ஆகியவற்றுக்கான சில்லறை வர்த்தகம் 3.6 விழுக்காடு அதிகரித்தது.
இதற்கு நேர்மாறாக பெட்ரோல் சேவை நிலையங்கள், ஆடைகள் மற்றும் காலணி நிறுவனங்களின் சில்லறை வர்த்தகம் ஆண்டு அடிப்படையில் முறையே 8.2 விழுக்காடு மற்றும் 8 விழுக்காடு குறைந்தது.
உணவு, பானத்துறை தொடர்பான விற்பனை மார்ச் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 2.8 விழுக்காடு சரிந்தது.