தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்ளூரில் வளர்க்கப்பட்ட உயிருள்ள கடலுணவு மூன்று ஜயண்ட் பேரங்காடிகளில் கிடைக்கும்

2 mins read
e034ca45-2dc4-49c7-97a9-09cd8f01e7d7
‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் ஃபிஷ்’ வர்த்தக முத்திரையின்கீழ் உள்ளூரில் வளர்க்கப்பட்ட திலாப்பியா மீனை ஒரு மீன் $7.90க்கும் வெள்ளை இறாலை ஒரு கிலோ $32.90க்கும் வாங்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

திலாப்பியா, கொடுவா மீன், கலவா மீன் (grouper), வெள்ளை இறால் போன்ற உள்ளூரில் வளர்க்கப்பட்ட உயிருள்ள கடலுணவை மூன்று ஜயண்ட் பேரங்காடிகளில் வாடிக்கையாளர்கள் இனி வாங்கலாம்.

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) முதல் ஜயண்ட் தெம்பனிஸ் அதிபேரங்காடியிலும் ஐஎம்எம், தெங்கா பிளான்டேஷன் பிளாசா கடைத்தொகுதிகளில் உள்ள ஜயண்ட் கடைகளிலும் உயிருள்ள கடலுணவு விற்கப்படும்.

‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் ஃபிஷ்’ வர்த்தக முத்திரையின்கீழ் உள்ளூரில் வளர்க்கப்பட்ட திலாப்பியா மீனை ஒரு மீன் $7.90க்கும் வெள்ளை இறாலை ஒரு கிலோ $32.90க்கும் வாங்கலாம்.

இதே திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூரில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளும் இந்த மூன்று பேரங்காடிகளில் விற்கப்படும். காய்கறி, மீன்களுக்கான தேவை, விநியோக ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டுவரும் சிங்கப்பூர் வேளாண்-உணவு நிறுவனக் கூட்டமைப்பு, இதர அமைப்புகளுடன் இணைந்து இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது.

‘எஸ்ஜி ஃபார்மர்ஸ் மார்க்கெட்’ வர்த்தக முத்திரையின்கீழ், 38 கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட் கடைகளில் உள்ளூர் காய்கறிகளையும் சம்மேளனம் விற்பனை செய்து வருகிறது.

ஜயண்ட் தெம்பனிஸ் மாபெரும் அங்காடியில் செவ்வாய்க்கிழமை நடந்த சம்மேளனத் திட்டத்தின் தொடக்கவிழாவில் பேசிய கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் பே யாம் கெங், உள்ளூர் பண்ணைகள் எதிர்நோக்கும் சவால்களை ஒப்புக்கொண்டார். ஆனால், உணவு மீள்திறனை வலுப்படுத்த உள்ளூரில் உணவு உற்பத்தி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இங்குள்ள கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட் பேரங்காடிகளை நடத்திவரும் கோல்ட் ஸ்டோரேஜ் சிங்கப்பூர், உள்ளூரில் உணவை உற்பத்தி செய்வதால் இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, விநியோக இடையூறுகளிலிருந்து பாதுகாப்பதுடன், பயனீட்டாளர்களுக்குப் புதிய உணவையும் உறுதிசெய்கிறது என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்