சிங்கப்பூரின் மின்தூக்கி, மின்படித் துறைக்கு கூடுதலானோர் ஈர்க்கப்படுகின்றனர்.
இத்துறையில் வேலை செய்வோரின் சராசரி வயது 40ஆகப் பதிவாகியுள்ளது. இது, ஈராண்டுகளுக்கு முன்பு பதிவான 46லிருந்து சரிந்துள்ளது.
இந்த ஊழியர்களுக்கான சராசரிச் சம்பளமும் சென்ற ஆண்டு 14 விழுக்காடும் இவ்வாண்டு 10 விழுக்காடும் அதிகரித்துள்ளது. பழுதுபார்ப்புப் பணியாளர்கள், தவறுகளைச் சரிபார்த்துச் சரிசெய்பவர்கள் (troubleshooters), மேற்பார்வையாளர்கள் என எல்லாப் பிரிவு வேலைகளுக்கும் இது பொருந்தும்.
இந்த மாற்றங்களால் மின்தூக்கி, மின்படித் துறையில் வேலை செய்யும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை ஏழு விழுக்காடு அதிகரித்துள்ளது.
குறைந்த சம்பளம், அதிக வேலை நேரம், குறைவான திறன்கள் தேவைப்படும் அதிக அபாயங்கள் உள்ள வேலைகளைக் கொண்டுள்ள துறை இது என்ற கண்ணோட்டம் இருந்து வந்தது. அதனால் இத்துறை மனிதவளப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வந்தது.
இப்போது இந்தப் புள்ளிவிவரங்கள், மின்தூக்கி, மின்படித் துறைக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளன.
புதன்கிழமை (நவம்பர் 26) மின்தூக்கி, மின்படித் துறைக்காக முதன்முறையாக நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், படிப்படியான சம்பள முறை இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஊழியர்களுக்காக 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்கீழ், மின்தூக்கி, மின்படித் துணை வல்லுநர் ஒருவர் அடிப்படை மாதச் சம்பளமாக 2,525 வெள்ளி பெறுவார்; மின்தூக்கி, மின்படி முதன்மை வல்லுநர் மாதந்தோறும் குறைந்தது 3,590 வெள்ளி பெறுவார்.
தொடர்புடைய செய்திகள்
படிப்படியான சம்பள உயர்வுத் திட்டம், மேற்பார்வையாளர், தொழில்நுட்பர் பொறுப்புகளுக்கு முன்னேற பழுதுபார்ப்பு ஊழியர்களுக்குத் தொழில்துறை வழிகாட்டுதலையும் வழங்குகிறது. சிங்கப்பூர் முழுவதும் சுமார் 79,000 மின்தூக்கிகளும் 7,900 மின்படிகளும் இருக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில், இருந்த இடத்திலிருந்தே மின்தூக்கிகளைக் கண்காணித்தல், பிரச்சினைகளைக் கண்டறிதல் (diagnostics) ஆகிய பணிகளில் தொழில்நுட்பர்கள் ஈடுபடுவதாகத் திரு சீ தெரிவித்தார். மேலும், பின்லாந்து நிறுவனமான கோனே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுச் செயலி ஒன்றையும் அவர்கள் பயன்படுத்துவதாகத் திரு சீ குறிப்பிட்டார்.
இவ்வாறு மின்தூக்கி, மின்படித் துறையில் ஊழியர்களின் திறன்கள் மேம்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

