சிங்கப்பூரில் 30 வயதுகளில் உள்ள இளையரிடையே உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அண்மை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வெளிப்புறப் பார்வைக்கு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வது போல் தோன்றினாலும், அகத்தில் நிலவும் கடுமையான மன உளைச்சலும் தனிமை உணர்வும் அத்தகைய முடிவுகளுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
வாழ்க்கைப் போராட்டமும் சமூக நெருக்கடியும்
35 வயது வரையிலான காலகட்டம் என்பது ஒருவரின் வாழ்க்கைப்பாதையில் மிகவும் முக்கியமான கட்டமாகும். வாழ்க்கைத்தொழில், குடும்பப் பொறுப்புகள், நிதிச் சுமைகள், சமுதாய எதிர்பார்ப்புகள் எனப் பலதரப்பட்ட அழுத்தங்கள் இக்காலகட்டத்தில் ஒன்றுதிரள்கின்றன.
30களில் உள்ள மக்கள், சமுதாயம் தம்மிடம் எதிர்பார்க்கும் நிலைகளுக்கும் தங்களின் தற்போதைய நிலைகளுக்கும் இடையே இடைவெளியை உணரக்கூடும் என மனநலக் கழகத்தின் மனநல மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசக மருத்துவர் டேனியல் ஃபுங் தெரிவித்தார்.
மேலும், “20 வயதில் நிச்சயமற்ற நிலை என்பது இயல்பான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், 35 வயதில் அதே நிச்சயமற்ற நிலை ஒரு தோல்வியாக உணரப்படலாம்,” என அவர் கூறினார்.
வேலைத்தளங்களில் நிலவும் கடுமையான போட்டி, வேலைப் பாதுகாப்பு குறித்த கவலைகள், குடும்பத்தை நிர்வகிப்பதற்கான நிதி நெருக்கடிகள் ஆகியவை இளையர்களின் மனநலனைப் பெரிதும் பாதிக்கின்றன.
இணையவழியில் எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், மனிதர்களுக்கிடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பு குறைந்துவருவது ஆழமான தனிமை உணர்வை உருவாக்குகிறது.
கடினமான உணர்வு, பாதுகாப்பற்ற நிலை போன்றவற்றை எதிர்கொள்ளும் இளைஞர்கள், படிப்பிலும் வேலையிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதன் மூலமோ, ஆதரவளிக்கும் நல்லுறவுகளைச் சார்ந்திருப்பதன் மூலமோ அவற்றிலிருந்து மீண்டுவர முடியும் எனத் திரு டேனியல் குறிப்பிட்டார்.
ஆனால், வாழ்க்கையின் சவால்கள் அவர்களின் சமாளிக்கும் திறனை மீறிச் செல்லும்போது, அத்தகைய அழுத்தங்களைக் கையாள்வதில் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்வர் என அவர் கூறினார்.
உதவி கோருவதில் உள்ள தயக்கம்
மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தபோதிலும், பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தினாலும் சமூகம் நம்மை எவ்வாறு அடையாளப்படுத்தும் என்ற பயத்தினாலும் பலர் உரிய நேரத்தில் மனநல ஆலோசனைகளைப் பெறத் தயங்குகின்றனர்.
அப்பிரச்சினையை எதிர்கொள்ளத் தனிநபர் விழிப்புணர்வு மட்டுமன்றி, சமுதாய அளவில் பரந்த அளவிலான சேவைகளும் ஆதரவுக் கட்டமைப்புகளும் வலுப்படுத்தப்பட வேண்டும். நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை, வாழ்க்கையில் சமநிலையை ஊக்குவிப்பதோடு, மனநல ஆதரவை வேலையிடங்களில் வழங்குவது அவசியமாகும்.
உறவினர்களும் நண்பர்களும் தங்கள் அன்புக்குரியவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, அவர்களுக்குத் தேவையான ஆதரவை அளிப்பது உயிர்மாய்ப்புகளைத் தடுக்க உதவும் முதன்மைச் செயல்பாடாகும்.


