தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீண்டகாலச் சேவைக்காகச் சிறப்பிக்கப்பட்ட கடற்படை நிர்வாகி

2 mins read
55f43e2c-a7c6-4f65-aae2-f667b562fe19
கடற்படை நிர்வாகி சுமதிக்குப் பதக்கம் வழங்கும் தற்காப்புப் படைத்தலைவர் வைஸ் அட்மிரல் ஆரோன் பெங். - படம்: தற்காப்பு அமைச்சு

சவால்களும் அனுபவங்களும் நிறைந்த பணி, தன்னை தன்னம்பிக்கை கொண்ட உறுதியான பெண்ணாக மாற்றியுள்ளதாக நம்புகிறார் சிங்கப்பூர்க் குடியரசு கடற்படையின் பொறியியல் தளவாடத் துறை நிர்வாகியான சுமதி.

கடந்த 25 ஆண்டுகளாக இத்துறையில் சேவையாற்றி வரும் சுமதி, இவ்வாண்டு நீண்டகாலச் சேவைக்கான பதக்கம் வென்றுள்ளார்.

“என்னால் இயன்ற வரை சிங்கப்பூர்க் கடற்படைக்குச் சேவையாற்றுவது மகிழ்சியளிக்கிறது,” என்று சொன்ன சுமதி, தேசத்திற்கான அர்ப்பணிப்புக்காகச் சிறப்பிக்கப்பட்டதில் மிகவும் பெருமையடைவதாகவும் கூறினார்.

பொருள் மேலாண்மைப் பிரிவில் நிர்வாகியாகப் பணியாற்றும் இவர், தமது பங்களிப்பும் அதற்குக் கிடைத்த அங்கீகாரமும் பிற ஊழியர்களையும், இத்துறையில் சேர விரும்புபவர்களையும் ஊக்குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து, அத்துறை தனது பணி முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை அளிப்பதுடன், தொடர்ந்து கற்பதையும் ஊக்குவிப்பதாகக் கூறிய சுமதி, மேலும் பல ஆண்டுகள் அத்துறையில் சேவையாற்ற விரும்புவதாகவும் சொன்னார்.

தேசிய தின விருதுகள்

தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த 918 பேர் பணியில் சிறப்பாக செயலாற்றியதற்காகவும், சேவை அர்ப்பணிப்பிற்காவும் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வைத் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

ராணுவ, ராணுவம் சாராத பணியாளர்களுக்கு மொத்தம் 161 பாராட்டுப் பதக்கங்களும், 161 செயல்திறன் பதக்கங்களும், 618 நீண்டகாலச் சேவைப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக, நவம்பர் 3ஆம் தேதி, மின்னிலக்க, உளவுத்துறைத் தலைவரும் ராணுவ உளவுத்துறை இயக்குநருமான மேஜர் ஜெனரல் லீ யி ஜின்னுக்கு பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (ராணுவம்) வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் 14 பேருக்கும் தற்காப்பு அமைச்சுப் பணியாளர்கள் ஒன்பது பேருக்கும் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) வழங்கப்பட்டது. 33 சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளும் 20 தற்காப்பு அமைச்சுப் பணியாளர்களும் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்