உச்சநீதிமன்ற ஆணையராக மூத்த வழக்கறிஞர் சுஷில் சுகுமாரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் அதை (மார்ச் 12) அறிவித்துள்ளது.
வழக்கறிஞர் பணிக்கு ஏறக்குறைய 35 ஆண்டுகளை அர்ப்பணித்த திரு. நாயர், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நீதிமன்ற ஆணையராகப் பொறுப்பேற்பார்.
அவரது தவணைக் காலம் ஓராண்டு நீடிக்கும்.
அதிபரால் குறிப்பிட்ட காலத்துக்கு நீதிமன்ற ஆணையராக நியமிக்கப்படுவோர் நீதிபதிக்குரிய அதிகாரத்தைக் கொண்டிருப்பர்.
திரு. நாயர் தற்போது டிரூ & நேப்பியர் சட்ட நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு வகிக்கிறார்.
திரு. நாயர் 1990ஆம் ஆண்டு வழக்கறிஞரானார். பின் டிரூ & நேப்பியர் நிறுவனத்தில் அவர் கால் பதித்தார்.
அங்கு ஆசிய பசிபிக் வட்டாரத்தில் குறிப்பாக இந்தோனீசியா, சீனா ஆகியவற்றின் சட்டத் துறைகளை மறுசீரமைப்பதில் திரு.நாயர் ஈடுபட்டார்.
தொடர்புடைய செய்திகள்
திரு. நாயரின் நிபுணத்துவமும் பங்களிப்பும் பேரளவில் அங்கீகரிக்கப்பட்டன.
ஆசிய பசிபிக் லீகல் 500 என்ற அமைப்பு அவரைக் கௌரவ உறுப்பினர் பட்டியலில் சேர்த்தது.
திரு. நாயர் தற்போது சட்ட அமைச்சு அமைத்த நொடிப்பு விவகாரச் சட்ட மறுஆய்வுக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரின் கொவிட்-19 தற்காலிகக் கட்டுப்பாடுகளுக்கான சட்டத்தைத் திரு. நாயர் கட்டமைக்க உதவினார்.
அதற்காக அவருக்கு சிங்கப்பூரின் பொதுச் சேவை நட்சத்திர (கொவிட்-19) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திரு. நாயரின் புதிய நியமனம் உள்பட உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 35 நீதிபதிகள் உள்ளனர்.

