நீண்டகாலத் திட்டமிடல் வெளிப்புற அதிர்ச்சிகளைச் சமாளிக்க உதவும்: துணைப் பிரதமர் கான்

நீண்டகாலத் திட்டமிடல் வெளிப்புற அதிர்ச்சிகளைச் சமாளிக்க உதவும்: துணைப் பிரதமர் கான்

3 mins read
9f680493-ed27-43a8-8f71-25a46cae797b
‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நான்காவது ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கத்தின் தொடக்கவிழாவில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோரிடம் நல்வாழ்வுத் தோட்டத்தின் நீரியல் முறை (hydroponics system) குறித்து மாணவர்கள் விளக்குகிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

விநியோக மூலங்களைப் பன்முகப்படுத்தி, முன்கூட்டியே திட்டமிடும் நாடுகள் எண்ணெய்ச் சந்தை இடையூறுகள் போன்ற வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொள்ள மேம்பட்ட நிலையில் உள்ளதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் திங்கட்கிழமை (மே 11) கூறினார்.

நாடுகள், வர்த்தகங்கள், குடும்பங்கள் ஆகியவற்றை உலகளாவிய எண்ணெய், எரிசக்தி விநியோகத் தடைகள் எவ்வளவு விரைவாகப் பாதிக்கின்றன என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். இதனால், மின்கட்டணம், போக்குவரத்துச் செலவுகள், வர்த்தகங்களுக்கான செயல்பாட்டுச் செலவுகள், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஆகியவை உயர்கின்றன.

நேவல் பேஸ் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ‘பசுமையாவோம் எஸ்ஜி 2026’ (Go Green SG) இயக்கத்தின் தொடக்கவிழாவில் பேசிய திரு கான், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்த்துப் போராடுவதில் மீள்திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நான்காவது ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கத்தின் தொடக்கவிழாவில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் உரையாற்றினார்.
‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நான்காவது ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கத்தின் தொடக்கவிழாவில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“சில நாடுகள் பருவநிலை நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டினாலும், அதன் தாக்கம் மெதுவடையவில்லை. உலகளாவிய கவனம் வேறு பக்கம் திரும்புவதால் பருவநிலை மாற்றத்தின் இயற்பியல் தன்மைகள் நின்றுவிடுவதில்லை. இதனால் சிங்கப்பூர் தனது பாதையில் உறுதியாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

2026ஆம் ஆண்டைப் பருவநிலைத் தகவமைப்பை முன்னிறுத்தும் ஆண்டாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நடத்தும் இந்த வருடாந்தர இயக்கம், குடிமக்கள், வர்த்தகங்கள், சமூகத்தை ஒன்றுதிரட்டி பருவநிலை மீள்திறன்மிக்க சிங்கப்பூரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மே 11 முதல் ஜூன் 28 வரை நடைபெறும் இந்த இயக்கத்தில், ஏறக்குறைய 500 பங்காளித்துவ அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் நேவல் பேஸ் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் துணி மறுபயன்பாட்டுப் பயிலரங்கைப் பார்வையிட்டனர்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் நேவல் பேஸ் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் துணி மறுபயன்பாட்டுப் பயிலரங்கைப் பார்வையிட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பருவநிலை மீள்திறனை உருவாக்க நீண்டகாலத் திட்டமிடல், தொடர்ச்சியான முதலீடு, சமூகப் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஆகியவை தேவை எனத் திரு கான் சுட்டினார்.

2027ல் வெளியிடப்படவுள்ள அரசாங்கத்தின் முதல் தேசியத் தகவமைப்புத் திட்டம், வெப்பம், வெள்ளம், நீர் பற்றாக்குறை, கடல்மட்ட உயர்வு போன்ற அபாயங்களுக்குத் தயாராவதற்கான நீண்டகால வழிகாட்டியாகச் செயல்படும் என்றார் அவர். நமது வீடுகள், பணியிடங்கள், பள்ளிகள், உள்கட்டமைப்புகளை எவ்வாறு சிறப்பாகத் தயார்படுத்தலாம் என்பதைச் சிந்திக்க இத்திட்டம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றத்தால் விநியோகத் தொடர்கள் சீர்குலையலாம் என்பதால், வர்த்தகங்கள் தங்களின் பருவநிலை அபாயங்களை மதிப்பிட்டு, வர்த்தகத் தொடர்ச்சித் திட்டங்களையும் தகவமைப்பு உத்திகளையும் உருவாக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு தயாராக உள்ள நிறுவனங்கள் நிலையற்ற உலகச் சூழலில் அதிகப் போட்டித்தன்மையுடன் சிறப்பாகச் செயல்படும் என்றார் அவர்.

பருவநிலை மீள்திறனில் சமூகங்களுக்கும் பள்ளிகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. “வெப்பம், வெள்ளம், புகைமூட்டம், டெங்கி போன்ற அபாயங்களைச் சிறப்பாகச் சமாளிக்க வலுவான சமூக ஆதரவு தேவை,” என்று கூறிய அவர், பருவநிலை மாற்றத்தை அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஓர் அம்சமாகப் புரிந்துகொள்ள பள்ளிகள் இளையர்களுக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார்.

விழாவில், நேவல் பேஸ் தொடக்கப்பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட நல்வாழ்வுத் தோட்டத்தைத் திரு கான் அதிகார்வபூர்வமாகத் திறந்துவைத்தார். அங்குள்ள சூரியசக்தி நீரியல் (solar-powered hydroponics) முறை மூலம் மாணவர்கள் பயிரிடும் விளைபொருள்கள் சமூகக் குளிர்பதனப்பெட்டிகள் மூலம் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, 2,000 பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100,000 பாலர்பள்ளி மாணவர்களுக்கு ஆற்றல் சேமிப்பு, வெப்ப மீள்திறன், கடலோரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு குறித்துக் கற்பிக்கும் நடவடிக்கை நூலை அமைச்சு வழங்குகிறது. வெப்பத்தை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் மாணவர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்வார்கள்.

மேலும், வெள்ள மேலாண்மை, கடலோரப் பாதுகாப்பு போன்ற உத்திகளை மாணவர்களுக்கு விளக்கும் காணொளி ஒன்றும் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

இந்தத் தொடக்கவிழாவில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
பருவநிலைஎரிசக்திஎண்ணெய்சந்தைவிநியோகம்மீள்திறன்அமைச்சுதிட்டம்துணைப் பிரதமர்கான் கிம் யோங்