சிங்கப்பூர் மிக நீண்டகாலத்துக்குப் பிறகு பலனளிக்கக்கூடிய திட்டங்களைத் தொடங்கத் தயாராக இருக்கவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
அத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வேண்டிய வளங்களையும் அரசாங்கக் கடப்பாட்டையும் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
பான் பசிஃபிக் சிங்கப்பூர் ஹோட்டலில் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்ற ‘சிஎன்ஏ சம்மிட்’ நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார்.
அத்தகைய திட்டங்கள் எளிதானவையல்ல என்று கூறிய திரு லீ, அத்திட்டங்கள் தொடர்பில் ஏற்படும் சிக்கலான தொழில்நுட்பச் சவால்களைக் கடந்துவர காலம், முயற்சி, வளங்கள் தேவை என்பதைச் சுட்டினார்.
“இருப்பினும் நீண்டகால நன்மைகள் தெளிவாகத் தெரிவதால் அத்தகைய திட்டங்களைத் தொடர்கிறோம். நிலப் பற்றாக்குறை போன்ற முட்டுக்கட்டைகளை முற்போக்குச் சிந்தனையுடன்கூடிய நகர்ப்புறத் தீர்வுகளாகவும் நீடித்த நிலைத்தன்மையுடைய வளர்ச்சியாகவும் அவை உருமாற்றுகின்றன,” என்றார் அமைச்சர்.
எடுத்துக்காட்டாக, ‘லாங் ஐலண்ட்’ திட்டத்தை அவர் குறிப்பிட்டார்.
தாழ்வான பகுதியான சிங்கப்பூரின் தென்கிழக்குக் கடற்கரையைக் கடல் மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் திட்டம் அது.
வருங்காலத்தில் வீடமைப்பு, பொழுதுபோக்கு, வேலை வாய்ப்பு ஆகிய அம்சங்களுக்கும் அது வகைசெய்யக்கூடும். மேலும், அந்தப் பகுதியில் சிங்கப்பூரின் நீர்ப் பாதுகாப்பை மேம்படுத்தும் வண்ணம் புதிய நீர்த்தேக்கமும் அமையக்கூடும் என்றார் திரு லீ.
தொடர்புடைய செய்திகள்
“அந்தத் திட்டம் நிறைவடைய பல பத்தாண்டுகள் பிடிக்கும். இப்போதுதான் தொடங்கியுள்ளோம். ஆனால் கரையோரப் பாதுகாப்பை இப்போதே தொடங்க வேண்டும். ஏனெனில் இது தாமதமானாலோ தோல்வியடைந்தாலோ வருங்காலத் தலைமுறையினருக்கு அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று அமைச்சர் விளக்கினார்.
நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வேண்டிய வளங்களையும் அரசாங்கக் கடப்பாட்டையும் கொண்டிருப்பது, முட்டுக்கட்டைகளைக் கடந்துவர சிங்கப்பூர் கடைப்பிடிக்கும் உத்திகளுக்கான நான்கு முக்கிய அணுகுமுறைகளில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரின் நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலில் 1950களில் இருந்தே ஒழுங்குமுறையுடன் கூடிய நீண்டகாலத் திட்டமிடல் கடைப்பிடிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் நீண்டகாலத்திற்குத் திட்டமிட்டாலும் புதிய சூழல்களுக்கு ஏற்ப திட்டங்களைப் புதுப்பித்துக்கொண்டு அது விரைந்து செயலாற்றக்கூடியதாக விளங்குவது முக்கியம் என்று திரு லீ கூறினார்.

