பொருள்களைச் சேகரித்து வைக்கும் பழக்கம் திரும்புவதைக் தடுக்க நீண்டகாலச் சமூக ஆதரவு அவசியம்

பொருள்களைச் சேகரித்து வைக்கும் பழக்கம் திரும்புவதைக் தடுக்க நீண்டகாலச் சமூக ஆதரவு அவசியம்

படம்: அங் மோ கியோ உயர்நிலைப் பள்ளி சமூக இயக்கம்

17 Sep 2026 - 5:11 pm

2 mins read

அதிகமான குப்பைகள் நிறைந்த ஒரு வீட்டைச் சுத்தம் செய்வதற்குப் பல நாள்கள் ஆகலாம். ஆனால் அந்தக் குப்பைகள் மீண்டும் சேராமல் தடுப்பதற்குத் தொடர்ச்சியான ஆதரவும், வழக்கமான பின்தொடர்தல்களும் தேவைப்படும் என்று தொண்டு நிறுவன அதிகாரிகளும் நிபுணர்களும் கூறியுள்ளனர்.

மான்ட்ஃபர்ட் கேர் நடத்தும் மூன்று குடும்ப சேவை நிலையங்களில் கவனிக்கப்படும் பொருள்களைச் சேகரிக்கும் சம்பவங்களில் சுமார் 60 விழுக்காடு, மீண்டும் பொருள்களைச் சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாக அந்த சமூக சேவை நிறுவனம் கூறியது.

நிலையான மாற்றத்திற்கு உடைமைகளை அகற்றுவதை விட, அவை மீண்டும் திரும்பாமல் தடுப்பதன் நடவடிக்கைகள் அதிகம் தேவை என்று சேகரித்து வைத்திருக்கும் மக்களுடன் பணிபுரிபவர்கள் கூறுகிறார்கள்.

பொறுமை, நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், படிப்படியாகக் குறைத்தல் ஆகியவை முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

88 வயதான திருவாட்டி லீ போ சென் உடனடியாக உதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை.

முன்னதாக அவரது வீடு குப்பைகள் நிறைந்ததாகவும், மூட்டைப்பூச்சித் தொல்லை கொண்டதாகவும் இருந்தது என்று ஆங் மோ கியோ உயர்நிலைப் பள்ளி சமூக இயக்கத்தின் நிறுவனர் மைக்கல் சிம் தெரிவித்தார்.

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு அந்த அமைப்பு இதில் ஈடுபட்டபோது, ​​தொண்டூழியர்கள் முதலில் மூன்று நாள்களை அவருடன் நட்புறவை வளர்த்துக்கொள்வதில் செலவிட்டனர். பின்னர், அவர்களின் உதவியை ஏற்றுக்கொள்வதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

சுமார் 600 தொண்டூழியர்களைக் கொண்ட இந்த நன்கொடை அமைப்பு, பொருள்களைச் சேகரித்து குவித்து வைக்கும் பழக்கத்தைக் கையாள்வதற்காக 2025ல் அமைக்கப்பட்ட 28 அமைப்புகளைக் கொண்ட குழுவின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.

இத்தகைய நடத்தையைக் கையாள்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க, சமூகச் சேவை அமைப்புகள், சமூகக் குழுக்கள், தனியார் நிறுவனங்களை உள்ளடக்கியதாக ‘புதிய சுற்றுப்புற நடவடிக்கை குழு’ (நீட்) அமைந்துள்ளது.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், ஆண்டுதோறும் உதவி கோரும் புதிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக 59 வயதான திரு சிம் தெரிவித்தார்.

இக்கோரிக்கைகளில் பெரும்பாலானவை, பொருள்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உதவி கோரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து வருகின்றன.

மீண்டும் பொருள்களைக் குவித்து வைக்கும் நிலைக்கு வழிவகுக்கும் காரணிகளில் ஒன்று, அதற்கான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் விதமாக இருக்கலாம் என்று மான்ஃபர்ட் கேர் அமைப்பின் உதவி இயக்குநர் ஜீனி டியோ கூறினார்.

“வீட்டில் உள்ள ஒரு பகுதியைச் சிறிது சிறிதாகச் சுத்தம் செய்ய ஏதேனும் வழிகள் உள்ளனவா என்பதை அந்த நபர் புரிந்துகொள்ள உதவும் வகையில், மிகச் சிறிய அல்லது அவருடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நாம் பரிசீலிக்கலாம்,” என்றும் டியோ விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்
சமூக சேவைநடவடிக்கைமுதியோர்

தொடர்புடைய செய்திகள்