கெம்பாங்கான், பிடோக் பெருவிரைவு ரயில் நிலையங்களில் பயணிகள் 17 நிமிடங்கள் வரை ரயில்களுக்காகக் காத்திருக்கவேண்டியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் நிலப் போக்குவரத்து ஆணையம் மேற்கொள்ளும் தண்டவாளப் பணிகள் இறுதிக் கட்டத்துக்குச் செல்லும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இவ்விரு நிலையங்களிலும் ஒரு தண்டவாளத் தடம் சோதனைகளுக்காகப் பயன்படுத்தப்படுவது தாமதத்துக்குக் காரணம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) குறிப்பிட்டது.
தண்டவாளப் பணிகளின்போது புதிதாக பொருத்தப்பட்டுள்ள தண்டவாளங்களில் ரயில்களைச் செலுத்தியும் மற்ற முறைகளைக் கொண்டும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு மேலும் அசெளகரியம் ஏற்படாமல் இருக்க இச்சோதனைகள் உச்சநேரமற்ற வேளைகளில் நடத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ரயில் (மின்சார, இயந்திரச் செயல்பாட்டு) பிரிவின் குழு இயக்குநர் சியா சூன் போ கூறினார்.
புதிய தண்டவாளங்களைச் சோதித்துப் பார்க்க வியாழக்கிழமையிலிருந்து (டிசம்பர் 4) ரயில்கள் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இச்சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால் பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் மணிக்கு 80 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் ரயில்களை இயக்கி சோதனையிடும்.
கனமழையின்போதும் ஊழியர்களால் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட முடிந்ததாக திரு சியா சொன்னார்.
தற்போது தானா மேரா, எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையேயும் பிடோக், தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையேயும் ரயில் சேவை இல்லை. கிழக்கு-மேற்கு ரயில் பாதையைப் புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையுடன் இணைக்கும் பணிகள் இடம்பெற வகைசெய்ய அந்நிலையங்களுக்கிடையே தற்போது ரயில் சேவை இல்லை.
தானா மேரா, சீமெய் ஆகிய நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியிலிருந்து வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 8) வரை சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கிடையே ரயில் சேவை இருக்காது.
அவற்றில் ரயில் சேவை திட்டமிட்டபடி வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு சியா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, தானா மேரா நிலையத்தில் மேலும் ஒரு ரயில் தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தத் தடம், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை இரண்டு தடங்களில் இயங்க வகைசெய்யும்.

