வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை அனைத்து லாரி வாகனங்களும் பொருத்தியிருக்க வேண்டும் என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
அவ்வாறு செய்யாதோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதிவரையில் 402 லாரிகள் அல்லது 16.2 விழுக்காடு அவ்வகை வாகனங்கள் இன்னும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை பொருத்தவில்லை என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த வாகனங்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி அதற்கான காலக்கெடு முடிவடைகிறது.
குறிப்பிட்ட வகை லாரிகளுக்கு கருவிகளைப் பொருத்த வேண்டிய காலக்கெடு அடுத்த 18 மாதங்களுக்கு கட்டங்கட்டமாக அவற்றின் எடையையும் பதிவு செய்யப்பட்ட நாளையும் வைத்து நீட்டிக்கப்படும் எனவும் போக்குவரத்துக் காவல்துறை கூறியுள்ளது.
“வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இன்னும் பொருத்தாத லாரிகள் சாலைகளில் செல்வது தடை செய்யப்படும். அவற்றின் வாகன உரிமங்களை புதிப்பிக்க முடியாது என்பதை வாகன உரிமையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று போக்குவரத்துக் காவல்துறை நினைவூட்டியது.
லாரிகள் சார்ந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காத உரிமையாளர்கள் மீது பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை பொருத்தாத குற்றங்களுக்கு அதிக அபராதங்கள் அவர்களுக்கு விதிக்கப்படும்.
உதாரணமாக சட்டப்படி கருவிகளை பொருத்தவேண்டிய காலக்கெடுவை பின்பற்றாதோருக்கு அல்லது அவற்றை சட்டவிரோதமாக மாற்றியமைப்போருக்கு அபராதம் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு S$10,000 ஆக விதிக்கப்படும். உள்துறை அமைச்சு 2026ஆம் ஆண்டுக்காகச் செய்துள்ள சட்டத் திருத்தங்களின்படி இந்த அபராதங்கள் அமலாக்கப்படுகின்றன.
தற்போதைய விதிகளின்படி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாத வாகனவோட்டிகளுக்கு $1,000 அபராதம் அல்லது மூன்று மாதம் வரை சிறைத்தணடனை விதிக்கப்படலாம். அக்குற்றங்களை மீண்டும் புரிவோருக்கு $2,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், வேகக் கட்டுப்பாட்டை மீறி லாரிகளை ஓட்டுவோருக்கு வேலையிடப் பாதுகாப்பு சுகாதார சட்டத்தின்படி வேலையிடத்தில் பாதுகாப்பற்ற செயலைப் புரிந்ததற்கான எச்சரிக்கை ஆணை பிறப்பிக்கப்படும்.
அந்த ஆணையின்படி, நிறுவனங்கள் அவற்றின் அனைத்து லாரிகளிலும் விதிக்கப்பட்டுள்ள சட்டபூர்வ காலக்கெடுவிற்கு முன்பாகவே, வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை உடனடியாகப் பொருத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் $50,000 வரையிலான அபராதத்தைச் செலுத்தவேண்டும்.
மேலும், கணக்குத் தணிக்கை நடவடிக்கைகளின்போது, வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை சட்டப்படி பொருத்தாத நிறுவனங்களின் பாதுகாப்பான செயல்பாட்டு (bizSAFE) உரிமங்களும் அவற்றைப் புதுப்பிப்பு செய்யும்போது பாதிப்படையலாம்.

