காயத்தை ஏற்படும் அளவுக்கு கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 60 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
வாகனம் ஒன்று மோதியதில் அந்த வாகனத்திற்கு அடியில் பெண் ஒருவர் கிட்டத்தட்ட சிக்கியதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து அந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்று உள்ளது.
அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 54 வயதுப் பெண் ஒருவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
பொங்கோல் சென்ட்ரல் புளோக் 166ஏ அருகே நிகழ்ந்த அந்த விபத்து குறித்து ஏப்ரல் 17 மாலை 6.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அது தெரிவித்ததது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகவும் கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பெண் ஒருவரைக் கொண்ட கும்பல் ஒன்று லாரியை மறித்து ஓட்டுநரை இறங்கச் சொல்லி வற்புறுத்தியபோது லாரி ஒருபக்கமாகத் திரும்பியதால் அந்தப் பெண் கீழே விழுந்தார்.
அதனைக் காட்டும் காணொளியை ‘எஸ்ஜி ரோடு விஜிலெண்டே’ அமைப்பு தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது.