போலி சமூக ஊடக விளம்பரங்களுடன் தொடர்புடைய ஆள்மாறாட்ட மோசடியால் $1 மில்லியன் இழப்பு

போலி சமூக ஊடக விளம்பரங்களுடன் தொடர்புடைய ஆள்மாறாட்ட மோசடியால் $1 மில்லியன் இழப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 7:29 pm

2 mins read

சமூக ஊடகங்களில் மூத்தோருக்கான நடவடிக்கைகள், நீர் சார்ந்த உடற்பயிற்சிகள், மறுசுழற்சி முயற்சிகள் தொடர்பான போலி விளம்பரங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆள்மாறாட்ட மோசடிகளில், பொதுமக்கள் ஏறத்தாழ $1 மில்லியனை இழந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை குறைந்தது 62 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் $989,000 தொகையை இழந்துள்ளதாகவும் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 20) காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஃபேஸ்புக்’ போன்ற சமூக ஊடகத் தளங்களில் தோன்றும் இந்தப் போலி விளம்பரங்களைக் காண்போரை, சில குறிப்பிட்ட திட்டங்கள் அல்லது சேவைகளுக்குப் பதிவு செய்யுமாறு கூறி, ஆண்ட்ராய்ட் செயலித் தொகுப்புக் கோப்பு ஒன்றைப் பதிவிறக்கம் செய்யவைத்து ஏமாற்றுவதே மோசடிக்காரர்களின் செயல்பாடாக உள்ளது.

அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்தவுடன், அரசாங்க அதிகாரிகள் அல்லது வங்கிப் பிரதிநிதிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பேசும் மோசடி பேர்வழிகள் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொள்கின்றனர்.

அவர்களின் வங்கிக் கணக்குகள் அல்லது மின்னிலக்கச் சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அச்சுறுத்துகின்றனர். தொடர்ந்து விசாரணை என்ற போர்வையில், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மாற்றச் சொல்லியோ, வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பகிருமாறு வற்புறுத்தியோ, தங்களிடமுள்ள விலைமதிப்பற்ற பொருள்களை ஒப்படைக்கச் சொல்லியோ மோசடிக்காரர்கள் நெருக்கடி தந்தனர்.

மேலும் சில சம்பவங்களில், சாதனங்களில் நிறுவப்பட்ட தீங்குநிரலைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் கணக்கிலிருந்து மோசடிக்காரர்களே நேரடியாக வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். தங்களுக்குத் தெரியாமல் நடந்த இந்தப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்த பிறகே, மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, மோசடி அழைப்புகளைத் தடுத்து சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகளை வடிகட்டும் ‘ஸ்கேம்ஷீல்ட்’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறும் சமூக ஊடக விளம்பரங்களின் நம்பகத்தன்மையை அதிகாரபூர்வ வழிகள் மூலம் உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்