சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பம் குறித்த மோசடியில் $400,000 இழப்பு

சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பம் குறித்த மோசடியில் $400,000 இழப்பு

படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

22 Apr 2026 - 6:50 pm

1 mins read

சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதியைப் பெற விண்ணப்பம் செய்வோருக்கு உதவுவதாக வலம்வந்த இணைய மோசடியில் இவ்வாண்டு ஏப்ரல் வரை கிட்டத்தட்ட $400,000 தொகையைப் பாதிக்கப்பட்டோர் பறிகொடுத்துள்ளனர்.

ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அதுதொடர்பில் 24 புகார்கள் பதிவானதாகக் காவல்துறை புதன்கிழமை (ஏப்ரல் 22) தெரிவித்தது.

சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதியைப் பெற்றுத்தருவதற்கான சேவைகளை வழங்குவதாக ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரங்களும் பதிவுகளும் வருவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

நிறுவனங்களில் முதலீடுகள் செய்வதற்கும் கல்விச் சான்றிதழ்களையும் நன்கொடைகளையும் பெறுவதற்குமான வாய்ப்புகளை வலுப்படுத்த கட்டணம் செலுத்தும்படி மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரிடம் தெரிவிப்பர்.

பாதிக்கப்பட்டோரை நம்பவைக்க போலியான ஆவணங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

கணக்கியல், நிறுவன ஒழுங்குமுறை ஆணையச் சான்றிதழ்கள், பள்ளிச் சான்றிதழ்கள், நன்கொடை ரசீதுகள் போன்ற போலியான ஆவணங்களையும் மோசடிக்காரர்கள் அனுப்பினர்.

அதையடுத்து, அறிமுகம் இல்லாதோரை நேரில் சந்தித்து பணம் கொடுக்கும்படியும் இணையம்வழி பணம் அனுப்பும்படியும் பாதிக்கப்பட்டோரிடம் தெரிவிக்கப்பட்டது.

குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் வழங்கியது போன்ற ஆவணங்களையும் ஒருசிலர் பெற்றனர். ஆணையத்தை நேரடியாகத் தொடர்புகொண்ட பிறகே பணத்தை இழந்தோர் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்டனர்.

சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பம் குறித்து வழங்கப்பட்ட போலிக் கடிதங்கள் குறித்து கவனமாக இருக்கும்படி கடந்த மாதம் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் எச்சரித்தது.

அறிமுகம் இல்லாதோருக்குப் பணம் அனுப்பவேண்டாம் என்று காவல்துறை மீண்டும் நினைவூட்டியது. மோசடி குறித்த சந்தேகங்கள் எழுந்தால் அதிகாரிகளிடமோ குடும்பத்தினர், நண்பர்களிடமோ அதுகுறித்து தெரிவிக்கும்படி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்