கொரிய இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடியில் $68,200 இழப்பு

கொரிய இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடியில் $68,200 இழப்பு

2 mins read
ee83e9ab-84c8-479e-a43d-ccb0cb41939d
சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் ‘பிடிஎஸ்’ இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் தொடர்பில், ஜூன் 1 முதல், 60க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்கள் பதிவானதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

புகழ்பெற்ற 'கே-பாப்’ இசைக்குழுவான ‘பிடிஎஸ்’ (BTS) சிங்கப்பூரில் வரும் டிசம்பர் மாதம் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டு விற்பனையில், கடந்த 10 நாள்களில் மட்டும் ஏறத்தாழ 62 மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் $68,200க்கும் அதிமான தொகையை இழந்ததாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தெரிவித்தது.

இன்ஸ்டகிராம், கேரோசல் போன்ற சமூக ஊடகங்கள், குறிப்பாக, எக்ஸ் தளம் வழியாக மறுவிற்பனை நுழைவுச்சீட்டுகள் இருப்பதாகக் கூறி, ‘பேநவ்’ அல்லது அதன் 'கியூஆர் குறியீடு’ மூலம் பணம் செலுத்தும்படி மோசடிக்காரர்கள் கேட்டதாகத் தெரிகிறது.

பின்னர், நிர்வாகக் கட்டணம் போன்ற காரணங்களைக் கூறிக் கூடுதல் பணமும் வசூலிக்கப்பட்டது. நுழைவுச்சீட்டுகள் கைக்குக் கிடைக்காதபோதுதான் பாதிக்கப்பட்டோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

டிசம்பர் 17, 19, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘டிக்கெட்மாஸ்டர்’ போன்ற அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் வாங்கப்பட்ட நுழைவுச்சீட்டுகள் மட்டுமே செல்லும். மறுவிற்பனை செய்யப்பட்ட நுழைவுச்சீட்டுகளை வைத்திருப்போர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்குப் பணமும் திருப்பித் தரப்படாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

‘டிக்கெட்மாஸ்டர்’ தளம், மின்னஞ்சல் வாயிலாக ஒருபோதும் நுழைவுச்சீட்டுகளை விநியோகிப்பதில்லை என்று காவல்துறை குறிப்பிட்டது.

பேஸ்புக் மார்க்கெட்பிளேஸ், டிக்டாக் ஷாப் போன்றவற்றில் நுழைவுச்சீட்டு வர்த்தகத்திற்கு அனுமதியில்லை. ரசிகர்கள் அத்தகைய விளம்பரங்களைக் கண்டால் உடனடியாகப் புகாரளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், கைப்பேசி உள்ளிட்ட சாதனங்களில் ‘ஸ்கேம்ஷீல்டு’ செயலியைப் பதிவிறக்கம் செய்து, மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்