கடந்த மே மாதம் 20ஆம் தேதியிலிருந்து ‘ஃபேஸ்புக் லைவ்’ நேரலை அம்சம் வழியாக மேற்கொள்ளப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கல் மோசடிச் செயல்களில் பாதிக்கப்பட்டோர் குறைந்தது 60,000 வெள்ளித் தொகையை இழ்ந்துள்ளனர் என்று காவல்துறை திங்கட்கிழமை (ஜூன் 15) தெரிவித்தது.
இத்தகைய சம்பவங்கள் குறித்து குறைந்தது 33 புகார்கள் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மோசடி மேற்கொள்ளப்படும் முறை
இத்தகைய மோசடிச் செயல்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு ஆலோசனை அறிக்கை மூலம் காவல்துறை, பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது. இதுபோன்ற செயல்களில் ‘ஸ்க்ரேட்ச் கார்ட்ஸ்’ எனப்படும் அதிர்ஷ்டப் பரிசு அட்டைகள், லாட்டரி சீட்டுகள் போன்றவற்றின் மூலம் வெற்றிபெற முடியும் என்று மோசடிக்காரர்கள் ஆசைக்காட்டி ஏமாற்றுவதுண்டு என்று காவல்துறை விவரித்தது.
தாங்கள் ‘வெல்லும்’ தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான ‘செயல்பாட்டுக் கட்டணத்தை’ செலுத்துமாறு பாதிக்கப்பட்டோர் கேட்டுக்கொள்ளப்படுவர். இவ்வாறு இத்தகைய மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தாங்கள் வென்றதாக நம்பிய தொகை அனுப்பப்படாதபோது அல்லது மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாதபோதுதான் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வர்.
தெரியாதவர்களிடம் பணத்தையோ மற்ற விலை மதிப்புமிக்கப் பொருள்களையோ ஒப்படைக்கவேண்டாம் என்று காவல்துறை, தங்கள் ஆலோசனை அறிக்கையில் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. மோசடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் ஸ்கேம்ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் காவல்துறை சுட்டியது.

