தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
குழந்தைகள் உலகிற்கு இறைவன் அளிக்கும் கொடை என்பதால் குழந்தை இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் சிறப்புமிக்கது என்கின்றனர் இத்தம்பதியர்.

முப்பது ஆண்டுகளாகச் செழித்து வளரும் அன்பு

3 mins read
c5ced4eb-cc2c-4eff-b736-83b8d8e6c452
ஒருவரையொருவர் மதித்து நடந்துகொள்ளும் எஸ்தர் - கோஸ்மாஸ் தம்பதியர்.  - படம்: ஜூசா குடும்பத்தினர்

மார்சிலிங் வட்டாரத்திலுள்ள ஜூசா தம்பதியரின் அடுக்குமாடி வீட்டிற்குள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்குக் காத்திருக்கிறது அன்பு ஒன்றுசேரும் கூடு.

வறுத்த வான்கோழி, ‘பை’ (pie), ‘டார்ட்’ போன்ற மேற்கத்திய உணவுப்பண்டங்களுடன் அண்டைவீட்டு மலாய்க்காரர் கொண்டுவந்த ரெண்டாங் குழம்பும் பிரியாணியும் மேசையில் வைக்கப்பட்டிருந்தன.

சுற்றியும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த நண்பர்கள், உறவினர்கள்.

இந்தக் காட்சி தம் மனத்தைக் குளிர வைப்பதாகத் தமிழ் முரசிடம் தெரிவித்தார் குடும்பத் தலைவியான 67 வயது எஸ்தர் கோர்னிலியா.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விருந்தினர்களைத் தங்கள் வீட்டுக்கு வரவேற்பதில் ஜூசா தம்பதியருக்குக் கொள்ளை இன்பம்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விருந்தினர்களைத் தங்கள் வீட்டுக்கு வரவேற்பதில் ஜூசா தம்பதியருக்குக் கொள்ளை இன்பம். - படம்: ஜூசா குடும்பத்தினர்

நெதர்லாந்தில் பிறந்து வளர்ந்த திருவாட்டி எஸ்தர், சிங்கப்பூரைச் சேர்ந்த மலையாளி ஆங்கிலோ இந்தியரான கோஸ்மாஸ் எமரால்டு ஜூசாவை 1988ல் சந்தித்து, ஈராண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டார்.

விமான நிலையச் சிப்பந்தியாக அப்போது பணியாற்றிய திரு ஜூசா, நண்பர் ஒருவரின்மூலம் கலைக் கல்வி ஆலோசகராக இருந்த திருவாட்டி எஸ்தருக்கு அறிமுகமானார்.

எஸ்தர் - கோஸ்மாஸ் தம்பதியரின் திருமண நாளன்று எடுக்கப்பட்ட படம்.
எஸ்தர் - கோஸ்மாஸ் தம்பதியரின் திருமண நாளன்று எடுக்கப்பட்ட படம். - படம்: ஜூசா குடும்பத்தினர்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் திருவாட்டி எஸ்தர் தமது படிப்பைத் தொடர முடிவு செய்தபோது அவருக்குத் தங்கும் இடத்தை அளிக்க திரு ஜூசா முன்வந்தார்.

மிகவும் மாறுபட்ட பின்புலங்களைக் கொண்ட தங்களைப் பிணைத்தது ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பு, மதிப்பு, வெளிப்படையான பேச்சு ஆகியவைதான் என்கின்றனர் எஸ்தர் - கோஸ்மாஸ் தம்பதியர்.

“வேலை நிமித்தமாக நான் பலமுறை வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய நிலையில், என் மனைவிதான் மூன்று மகன்கள் கொண்டுள்ள குடும்பத்தைக் கட்டிக்காத்தார்,” என்றார் 70 வயது திரு ஜூசா.

செல்ல நாயுடன், எஸ்தர்-கோஸ்மாஸ் தம்பதியர் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்துகின்றனர்.
செல்ல நாயுடன், எஸ்தர்-கோஸ்மாஸ் தம்பதியர் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்துகின்றனர். - படம்: ஜூசா குடும்பத்தினர்

இவர்கள் இருவருக்குமே இளமைக்கால கிறிஸ்துமஸ் அனுபவம் வெவ்வேறாக இருந்தது.

“நான் வளர்ந்த காலகட்டமான 1960களில் எனது நாட்டில் பழமைவாதம் நிலவியது. பெரியவர்கள் தொப்பியையும் கச்சிதமான மேற்கத்திய ஆடைகளையும் அணிந்து ஒருவித கட்டுக்கோப்புடன் இருந்தனர். உண்மையான மரத்தை வெட்டி வீட்டுக்குள் வைத்து அலங்கரித்தோம்.

வறுத்த வான்கோழி.
வறுத்த வான்கோழி. - படம்: ஜூசா குடும்பத்தினர்

“கிறிஸ்துமஸ் பண்டிகை, விருந்துணவு ஆகியவற்றில் முறைமை இருந்தது. கலாசாரம் இப்போது மாறியுள்ளது. இப்போது பண்டிகையை நாங்கள் தாராளப்போக்குடன் கொண்டாடுகிறோம்,” என்று திருவாட்டி எஸ்தர் கூறினார்.

சிங்கப்பூரில் எளிமையான குடும்பத்தில் வளர்ந்த திரு ஜூசாவின் அனுபவம் மாறுபட்டதாக இருந்தது.

“சிறுவனாக இருந்தபோது ஒருமுறை மரக்கிளை ஒன்றை எடுத்து நான் அதனை கிறிஸ்துமஸ் மரமாக அலங்கரித்தேன்,” என்று அவர் புன்னகையுடன் கூறினார்.

இளம்பெண்ணாக, இந்தோனீசியா, மெக்சிகோ, கம்போடியா ஆகிய நாடுகளுக்குச் சென்ற திருவாட்டி எஸ்தர், தமிழகத்தின் கோயம்புத்தூருக்குச் சென்று, அந்தக் காலகட்டத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த பிள்ளைகளுக்குக் கல்வித்துறை முனைவர் என்ற முறையில் உதவி செய்தார்.

பல்வேறு நாடுகளுக்குச் சென்று அவர்களது பண்பாட்டை நன்கு புரிந்துகொள்ளும் திருவாட்டி எஸ்தரின் ஆர்வத்தையும் பரந்த மனப்பான்மையையைும் அவரின் கணவர் திரு ஜூசா பாராட்டுகிறார்.

மார்சிலிங் வட்டாரத்திலுள்ள ஜூசா இல்லத்தில் ‘சான்டா குளோஸ்’ உருவ பொம்மையுடன் அலங்காரப் பொருள்கள்.
மார்சிலிங் வட்டாரத்திலுள்ள ஜூசா இல்லத்தில் ‘சான்டா குளோஸ்’ உருவ பொம்மையுடன் அலங்காரப் பொருள்கள். - படம்: ஜூசா குடும்பத்தினர்

“ஒவ்வொரு பண்பாட்டிற்கும் உரிய அழகை உணர்வதிலும் தாம் சந்திக்கும் மாந்தர்களுக்குள் இருக்கும் நற்குணங்களை வெளிக்கொணர்வதிலும் என மனைவி திறமைசாலி,” என்று அவர் பெருமையுடன் கூறினார்.

தற்போது சிங்கப்பூரிலுள்ள உடற்குறையுள்ள பிள்ளைகளுக்காகப் பணியாற்றி அவர்களுக்குக் கலைத்திட்டங்களை வடிவமைப்பதில் திருவாட்டி எஸ்தர் கவனம் செலுத்தி வருகிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை சிங்கப்பூரில் காலப்போக்கில் விரிவடைந்தாலும் அந்தப் பண்டிகை வணிகமயமாவதைக் கண்டு கவலைப்படுவதாக இந்தத் தம்பதியர் கூறுகின்றனர்.

பால்கட்டியுடன் பழரசம்.
பால்கட்டியுடன் பழரசம். - படம்: ஜூசா குடும்பத்தினர்

நண்பர்களை வீட்டிற்கு அழைக்கும்படி தொடர்ந்து தம் மகன்களை ஊக்குவிப்பது, அவர்கள் பண்டிகை நேரத்தில் குடும்பத்தினருடன் தொடர்ந்து ஒற்றுமையாக இருப்பதற்குக் காரணம் என்று திருவாட்டி எஸ்தர் நம்புகிறார்.

“என் வீட்டுக்கு வரும் இளையர்களை என் குழந்தைகளாகவே கருதுகிறேன். குழந்தை இயேசுநாதரின் பிறப்பைக் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறது. இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் மிக உன்னதமானது என்பதால், குழந்தையின் பிறப்பை ஒட்டிய இக்கொண்டாட்டம் மிகவும் அர்த்தமுள்ளது,” என்கிறார் இந்த அன்புத்தாய்.

குறிப்புச் சொற்கள்