நாகரிக உடைகளை விற்கும் லவ், போனிட்டோ (Love, Bonito) நிறுவனம் அதன் உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் 29 பேரை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
அவர்களில் 14 பேர் சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள்.
ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களின் விகிதம் லவ், போனிட்டோ நிறுவனத்தின் மொத்த ஊழியரணியில் 6.9 விழுக்காடு.
பாதிக்கப்படும் ஊழியர்கள், உள்ளூர் சட்டதிட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய ஆதரவுத் தொகுப்புகளைப் பெறுவர்.
இதனை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திருவாட்டி டியோன் சோங் தெரிவித்து உள்ளார்.
“வேலை செய்த ஆண்டுகளின் அடிப்படையில் சம்பள வழங்கீடு இருக்கும். ஆட்குறைப்பு அறிவிக்கப்பட்ட நாள், வருடாந்திர விடுப்பு விகிதாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் தொகையும் அதனுள் அடங்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டை தமது நிறுவனம் நீட்டிக்கும் என்றும் அவர்களுக்கு வேறு வேலை கிடைக்க உரிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதோடு அதற்குத் தேவைப்படும் பரிந்துரை கடிதம் வழங்கப்படும் என்றும் திருவாட்டி சோங் கூறினார்.
எந்த மாதிரியான வேலைகளில் ஆட்குறைப்பு செய்யப்படுகிறார்கள் என்றும் இவ்வாறு செய்வதால் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் பாதிக்கப்படுமா என்றும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை என ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்து உள்ளது.

