கைவினைப் பொருள்களுடன் வண்ணமயப் பொங்கல்

3 mins read
9df5d350-c730-416a-a1c3-83ce8c5759a8
அழகுக் கைவினைகள் நிறைந்த கல்யாணி கோபாலின் (ஆக இடது) வீட்டில் ‘பொங்கல் கொலு’வை அமைக்க அவருக்கு நண்பர்களான பிரபாவதி சிங்காரம் (நடுவில்), புவனேஷ்வரி மங்களேஷ்வரன் ஆகியோர் உதவுகின்றனர். இறை, இயற்கை, உழவு ஆகியவற்றைப் போற்றுவது இதன் நோக்கம் என அவர்கள் கூறுகின்றனர். - படம் த.கவி
multi-img1 of 2

தமிழ்ப் பண்பாடு, குறிப்பாகக் கலை வடிவங்களின் மீதான பேரார்வம், திருவாட்டி கல்யாணி கோபாலை நல்ல நண்பர்கள் சிலருடன் இணைக்கிறது. அதிலும், பொங்கல் போன்ற திருநாளில் கலைக்கூறுகள் நிறைந்த கூடமாய், மரின் பரேடிலுள்ள அவரது கூட்டுரிமை அடுக்குமாடி வீடு மிளிர்கிறது.

சிக்குக் கோலம், படிக்கோலம், நீர்க்கோலம், பூக்கோலம் என இல்லத்தில் செழுமை நிறைந்த கலை வேலைப்பாடுகளைச் செய்திருக்கிறார் திருவாட்டி கல்யாணி.

கரும்பு மட்டுமின்றி துளசி, வேம்பு, செம்பருத்தி என வீட்டின் உள்ளேயே எழில் கொஞ்சும் இந்த வடிவமைப்பு, பாரம்பரிய வீட்டின் முற்றத்தைப் பார்ப்பவருக்கு நினைவூட்டும். அத்தகைய முற்றங்களையும் இது அழகில் விஞ்சுவது போலத் தோன்றும்.

அலங்காரங்களுக்கு முன்னதாக, ஒரு வாரமாக வீட்டைச் சுத்தம் செய்ததாகத் தெரிவித்த திருவாட்டி கல்யாணி, சூரியனுக்குப் படைக்கப்படும் பொங்கல் பானையையும் வீட்டுச் சமையல் உபகரணங்களையும் புதிதாக வாங்குவதாகக் கூறினார்.

தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கும் திருவாட்டி கல்யாணி சென்னையின் அண்ணா நகரிலிருந்து இங்கு வந்தவர். 1995லிருந்து அவர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். வளர்ந்த இரு பிள்ளைகளுக்குத் தாயாராக உள்ள திருவாட்டி கல்யாணி, நண்பர்களையும் தம் வீட்டுக்கு வரவழைப்பார்.

சிங்கப்பூரில் தொடர்ந்து நீடிக்கும் பழம்பெரும் பெண்கள் அமைப்பான ‘கமலா மன்றத்தில்’ சந்தித்த நண்பர்களை அழைத்திருந்த அவர், மொழிப்பற்று காரணமாகவும் பாரம்பரியக் கலைகள் மீதான ஆர்வத்தாலும் ஒருவருக்கொருவர் நெருக்கத்தைப் பாராட்டி வருவதாகக் கூறினார்.

“நண்பர்களை நான் என் குடும்பத்தினராகக் கருதுகிறேன். நல்ல நட்பு வாழ்க்கைக்கு மெருகேற்றுவதால் அவர்களைக் கொண்டாட்டங்களுக்கு அழைப்பேன்,” என்றார் திருவாட்டி கல்யாணி.

தம் வீட்டிற்குப் புவனேஷ்வரி மங்களேஷ்வரன், பிரபாதேவி சிங்காரம் ஆகியோரைத் திருவாட்டி கல்யாணி அழைத்திருந்தார். மனமொத்த இந்த நண்பர்கள், அவரது வீட்டில் சிறப்பாக அமைக்கப்பட்ட பொங்கல் கொலுவை அலங்கரிக்க உதவி செய்திருந்தனர்.

நவராத்திரி கொலுவைப் போலத் தோற்றமளிக்கும் இந்தப் பொங்கல் கொலுவின் படிகளில் தெய்வத் திருவுருவங்கள் மட்டுமின்றி இயற்கை, உழவு சார்ந்த அழகிய கைவினைப் பொருள்களும் வைக்கப்பட்டன. அத்துடன், அரிசி, பருப்பு உள்ளிட்ட தானிய வகைகளும் இடம்பெறும் வகையில் அதனை அலங்கரித்துள்ளார்.

“உயிரினும் மேலான கலைப் பண்பாட்டைத் தொடர வேண்டும் என்ற வேட்கையில் இதைச் செய்கிறேன். இந்தியக் கலைகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தரும் ஆதரவு எனக்கு மேலும் ஊக்கம் தருகிறது,” என்று அவர் கூறினார்.

கமலா மன்றத்தில் இருந்த மற்ற இந்தியப் பெண்கள், தத்தம் மொழி,பண்பாடுகளின் மீது பற்று கொண்டுள்ளதாக் குறிப்பிட்ட பிரபாதேவி சிங்காரம், அங்கு தாமும் தம் நண்பர்களும் தமிழ்ப் பண்பாட்டைப் பெருமையுடன் பிரதிநிதிப்பதாகக் கூறினார்.

பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் கலைப்படைப்புகளில் ஈடுபடும் இந்தக் குழுவினர், இங்கு திறம்படச் செயல்படும் தமிழ் அமைப்புகள் மேன்மேலும் தங்களுக்கு இடையிலான இணைப்புகளை வளர்த்துக்கொண்டு ஒற்றுமையைப் போற்ற வேண்டும் என மனதார விரும்புவதாகக் கூறுகின்றனர்.

அன்பும் அரவணைப்பும் நிறைந்த சூழலில் புகட்டப்படும் பண்பாடு வழமைகள், இளையர் தலைமுறைகளால் நிச்சியம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்

திருவாட்டி கல்யாணியின் கணவர் திரு சேகர் ஸ்ரீநிவாசன் கூறுகையில், “கலைப்பொருள்களுடன் திருநாளைக் கொண்டாடும்போது பிள்ளைகளுக்கும் அது உற்சாகம் தருகிறது. அழகுக் கலைக் குடியிருக்கும் ஓர் இடமாக வீடும் தோற்றமளிக்கிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்