தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதல் மோசடி: அறிவுத்திறன் குன்றியவர் ஏமாந்தார்

2 mins read
d317d37c-25af-4e73-a677-c87dfe2c08ed
காவல்துறையுடன் இணைந்து மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் எஸ்பிடி அறநிறுவனம் ஈடுபட்டு வருகிறது. - படம்: எஸ்பிடி

காதல் மோசடியில் அறிவுத்திறன் குன்றிய ஆடவர் ஒருவர் ஏமாந்தார்.

சமூக ஊடகம் மூலம் பெண் ஒருவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.

தமது சேமிப்பிலிருந்து $100க்கும் அதிகமான தொகையை அவருக்கு அந்த ஆடவர் அனுப்பிவைத்தார்.

அந்த ஆடவரைச் சந்திக்க சிங்கப்பூருக்கு வருவதாக அப்பெண் அவரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்காக அந்த ஆடவர் தானா மேரா படகு முனையத்தில் பல மணி நேரம் காத்திருந்தார்.

ஆனால் இறுதி வரை அப்பெண் வரவில்லை.

அதன் பிறகு அந்த ஆடவருடன் தொடர்புகொள்வதையும் அப்பெண் நிறுத்திக்கொண்டார்.

மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையில் சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் எளிதில் சிக்கிக்கொள்வதைக் காட்ட இச்சம்பவம் குறித்து, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் எஸ்பிடி எனும் உடற்குறைபாடு கொண்டவர்கள், அறிவுத்திறன் குன்றியோர் ஆகியோருக்கு உதவும் அறநிறுவனத்தைச் சேர்ந்த தலைமை சமூக ஊழியர் திருவாட்டி ஜீனா டான் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூரில், கடந்த ஆண்டு மோடிக்காரர்களிடம் ஏமாந்தவர்கள் முன் இல்லாத அளவுக்கு $1.1 பில்லியன் இழந்தனர்.

இந்தப் புள்ளிவிவரங்களைக் காவல்துறை பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிட்டது.

மோசடிகள் காரணமான ஓர் ஆண்டில் $1 பில்லியனுக்கும் அதிகமான தொகை பறிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

2025ஆம் ஆண்டில் இதுவரை 3,500 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன.

பாதிக்கப்பட்டோர் இழந்த தொகை $80.7 மில்லியனுக்கும் அதிகம்.

மோசடிக் குற்றங்களால் அறிவுத்திறன் குன்றியோர் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்று சமூக சேவை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மோசடிக்காரர்களிடமிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்து அறிவுத்திறன் குன்றியோருக்கு எஸ்பிடி, தாய் ஹுவா குவான் அறநிறுவனங்கள் மற்றும் டச் சமூக சேவைகள் கற்றுத் தருகின்றன.

அறிவுத்திறன் குன்றியோர் பலருடன் மோசடிக்காரர்கள் காணொளி அழைப்பு மூலம் தொடர்புகொள்வதாக செம்பவாங்கில் உள்ள தாய் ஹுவா குவான் உடற்குறை, அறிவுத்திறன் குன்றியோர் இல்லத்தின் கண்காணிப்பாளரான திருவாட்டி குலோவி லீ கூறினார்.

மோசடிக்காரர்கள் சிலர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பிரபலங்கள் அல்லது காவல்துறை அதிகாரிகளைப் போல வேடமிடுவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்