நோன்புப் பெருநாள் மகிழ்ச்சியில் திளைக்கிறது அப்பர் ஜூரோங் ரோட்டில் உள்ள யாஸ்மின்-புராக் பாலிக் இணையரின் இல்லம். சிரிப்பொலியும் விளையாட்டும் பச்சிளம் பிள்ளைகளின் மகிழ்ச்சியான கூச்சல்களும் நிறைந்த அன்புக் கூடு அது.
2016ஆம் ஆண்டில் இவர்களுக்கு இடையே மலர்ந்த காதலால், நான்கு செல்லப் பிள்ளைகளைக் கொண்ட அழகிய குடும்பம் கனிந்தது.
ஈராண்டுகள் இணையம் வழியாகத் தொடர்பில் இருந்ததை அடுத்து திரு புராக், தாம் வசித்துவந்த துருக்கியின் கடலோர நகரமான இஸ்மிரிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார்.
“எனக்கு முன்னதாக என் சகோதரர் சிங்கப்பூருக்கு வந்து எனது அப்போதைய காதலியான யாஸ்மினைச் சந்தித்தார். சிறிது காலம் கழித்து நான் வந்தேன். அதே ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொண்டோம்,” என்று 37 வயது செயலாக்க மேற்பார்வையாளரான புராக் தெரிவித்தார்.
இத்திருமணத்தில் சவால்கள் இருக்கத்தான் செய்தன என்று அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.
தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மட்டுமன்றி, மொழி, பண்பாடு ஆகியவற்றிலும் மிகுந்த வேறுபாடுகள் இருப்பதாக இருவருமே கூறினர்.
கைகளால் சாப்பிடும் சிங்கப்பூர் வழக்கத்தைக் கண்டு தொடக்கத்தில் அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டார் திரு புராக்.
“நான் வளர்ந்த பண்பாட்டில் சாப்பிடும்போது கைகளைப் பயன்படுத்துவது அசுத்தமாகக் கருதப்படுகிறது. எனவே, சிங்கப்பூரில் சிலர் கைகளால் சாப்பிடுவதைக் கண்டு வியந்தேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கைகளால் சாப்பிட்டுப் பழகிய திருவாட்டி யாஸ்மினுக்கு இது பெருத்த சவால். இந்த வழக்கத்தை ஏற்க மறுத்த கணவருக்காகத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழலில் அவர் இருந்தார்.
திரு புராக்கிற்கு உள்ளூர் மசாலாவின் காரம், 10 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏற்புடையதாக இல்லை. பாலாடைக்கட்டி, சுஜுக் போன்ற துருக்கிய உணவுகளையே அவர் நாடுகிறார்.
உணவு மேசையைத் தாண்டி, இவர்கள் தங்களின் மனநிலைகளையும் சமூக எதிர்பார்ப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது.
துருக்கிய ஆண்கள் பெரும்பாலும் சற்று முன்கோபக்காரர்கள் என்றும், அடிக்கடி சண்டையிடுவார்கள் என்றும் கூறிய திரு புராக், சிங்கப்பூரர்கள் மிகவும் அமைதியானவர்கள் எனக் கருதுகிறார்.
“நாங்கள் இப்போது ஒரு குடும்பம் என்றும், என்ன நடந்தாலும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதற்காகவே கடவுள் எங்களைச் சேர்த்து வைத்துள்ளார் என்றும் நான் நினைத்துக்கொண்டேன். எனவே, நாங்கள் இதை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.
அவர்களது மூத்த மகன் பிலால் பாலிக்குக்கு எட்டு வயது. இரண்டாவது பிள்ளையான மரியத்திற்கு ஆறு வயது. அடுத்து நான்கு வயது ஹுத் பாலிக், மூன்று வயது யூனுஸ் பாலிக் இருவரும் உள்ளனர்.
“கடவுள் என்னையும் என் மனைவியையும் இணைத்துவிட்டார். ஒருவரையொருவர் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு முதிர்ச்சி உள்ளது,” என்று திரு புராக் கூறினார்.
சிங்கப்பூரில் தாம் உணரும் பாதுகாப்பு அவரை நெகிழச் செய்துள்ளது. “அனைவரும் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறார்கள், மேலும் தங்களது சமயங்களைச் சுதந்திரமாகப் பின்பற்றுகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

