வீவக வீட்டைப் பிரதிபலிக்கும் லவ்‌ஷாங் காப்பிக்கடை ஜூலை 14ல் மூடல்

வீவக வீட்டைப் பிரதிபலிக்கும் லவ்‌ஷாங் காப்பிக்கடை ஜூலை 14ல் மூடல்

1 mins read
6099c7fc-7540-4bac-bf4d-ef854065a39b
தனித்துவமான உள்வடிவமைப்புக்காகப் பெயர்பெற்ற லவ்‌ஷாங், மூன்று ஆண்டுகளாக இயங்கிவருகிறது.   - காணொளிப் படம்: லவ்‌ஷாங்.பிரின்செப், டிக்டாக்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் பாணியில் அமைந்திருக்கும் லவ்‌ஷாங் காப்பிக்கடை ஜூலை மாதம் 14ஆம் தேதி மூடப்படவிருக்கிறது. அது கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிவருகிறது.

காப்பிக்கடை அமைந்துள்ள இடம், பொருள்களின் விலை ஆகியவற்றின் காரணமாக வர்த்தகத்தைத் தொடர்வது சிரமமாய் இருப்பதாக அதன் உரிமையாளர் செபாஸ்டியன் அங் இம்மாதம் 15ஆம் தேதி வெளியிட்ட டிக்டாக் காணொளியில் தெரிவித்தார்.

எண்.38, பிரின்செப் ஸ்திரீட்டில் உள்ள கடைவீடொன்றில் அது அமைந்துள்ளது. அந்தப் பகுதி சற்று அமைதியாகக் காணப்படும் என்றும் இரண்டாம் தளத்தில் உள்ள காப்பிக்கடையை அணுக மின்தூக்கி வசதி இல்லை என்றும் திரு அங் குறிப்பிட்டார்.

லவ்‌ஷாங்கில் வழங்கப்படும் உணவு-பானங்கள், காப்பிக்கடையில் இருப்பவற்றைப் போலல்லாமல் ஓர் உணவகத்தைப் போன்று இருக்கின்றன என்றார் அவர். அதனால் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வருவது குறைவு என்று திரு அங் கூறினார்.

கொடுக்கும் காசுக்கு உரிய பலன் கிடைத்ததாக வாடிக்கையாளர்கள் கருதவேண்டும் என்றார் அவர்.

“உணவு விலை அதிகம் என்று நினைத்தால் பெரும்பாலும் அவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்,” என்று திரு அங் தெரிவித்தார்.

லவ்‌ஷாங் காப்பிக்கடையின் இணையத்தளத்தில் காணப்படும் பட்டியலில் உணவுவகைகள் ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட $20 ஆக உள்ளது.

காப்பிக்கடையின் அறிவிப்பை 80,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மாறுபட்ட கருத்துகளையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்