திருமதி நூர் ஃபராஹின் அகமது, 54, கடுமையான மறதி நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் 81 வயது தந்தையையும் தனது ஒன்பது வயது மகனையும் தனி ஒருவராகப் பராமரித்து வருகிறார்.
தனது குடும்பக் கடமைகளுக்காக 2024 அக்டோபர் மாதம் பொதுச் சேவை வேலையைக் கைவிட்டு தனது சேமிப்பில் அவர் வாழ்ந்து வருகிறார்.
இவரைப் போன்ற குறைந்த வருமானப் பராமரிப்பாளர்கள், புதிய என்டியுசி பராமரிப்பு நிதியுதவிக்கு ஏப்ரல் மத்தியிலிருந்து விண்ணப்பிக்கலாம்.
சுமார் 5.4 மில்லியன் நிதியுதவி, முதல் முறையாக 2024 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. இது, 2025 முதல் 2027 வரை ஆண்டுக்கு 4,000க்கும் மேற்பட்ட பராமரிப்பாளர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டது.
“என்னுடைய தந்தைக்கு மட்டுமே மாதம் $400 முதல் $500 வரை செலவாகிறது,” என்று திருமதி ஃபராஹின் கூறினார்.
அதிகபட்சம் மாத மொத்த வருமானம் $6,000 கொண்ட ஒற்றைப் பராமரிப்பாளர்கள், 19 முதல் அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள் அல்லது 63 வயதுக்கு மேற்பட்ட வயதான பெற்றோரைப் பராமரிக்க இந்த நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.
பராமரிப்பாளரின் மொத்த மாத வருமானம் 6,000 வெள்ளிக்கு மேல் இருந்தால், அவரது தனிநபர் வருமானம் $1,500 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் மானியத்துக்குத் தகுதி பெற முடியும்.
தகுதியுள்ள பராமரிப்பாளர்கள், பள்ளிக்குச் செல்லும் ஒரு குழந்தைக்கு 350 வெள்ளியும் சார்ந்து இருக்கும் வயதான ஒருவருக்கு 200 வெள்ளியும் மானியம் பெற முடியும்.
தொடர்புடைய செய்திகள்
அரசு நிதி பெறும் சிறப்புக் கல்வி (SPED) பள்ளிகளில் படிக்கும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளைப் பராமரிப்பவர்கள், மாத வருமானம் $6,000க்கு குறைவாக இருந்தால் அல்லது அவரது தனிநபர் வருமானம் 1,500 வெள்ளி அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் இந்த நிதிக்குத் தகுதி பெறுவார்கள்.
இத்தகைய பராமரிப்பாளர்கள், அரசாங்க சிறப்புக் கல்வி பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் $1,000 பெறுவார்கள்.
புதிய என்டியுசி பராமரிப்பு மானியம் பற்றிய விவரங்களை சனிக்கிழமை (மார்ச் 8) அன்று என்டியுசி யு மகளிர், குடும்பம் மற்றும் மக்கள் செயல் கட்சியின் மகளிர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தில் என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் வெளியிட்டார்.
வேலை மற்றும் பராமரிப்புக் கடமைகள் ஆகியவற்றுக்கு இடையே சிரமப்படும் பராமரிப்பாளர்களின் சவால்களைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று தனது உரையில் திரு இங் குறிப்பிட்டார்.
வேலையையும் பராமரிப்புக் கடமைகளையும் சிறந்த வகையில் சமாளிக்க அர்த்தமுள்ள நிதியுதவி உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சி மகளிர் பிரிவின் தலைவர் சிம் ஆன், 60 ஆண்டுகால பெண்களின் முன்னேற்றத்தைக் கட்சி பிரதிபலிப்பதாகக் கூறினார்.
பெண்களின் பிரச்சினைகளைக் கவனிக்க மசெக மகளிர் பிரிவு சமூகத்துடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டம், கரையோரப் பூந்தோட்டங்கள் முதல் என்டியுசி வரையிலான இரண்டு கிலோ மீட்டர் நடையுடன் தொடங்கியது. இதில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

