தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த பொதுத் தேர்தலில் லோ தியா கியாங் போட்டியிட மாட்டார்

2 mins read
2bed66da-3eaa-486f-a516-7e20f6181c65
தாம் ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்டதாகவும் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்றும் திரு லோ தியா கியாங் கூறியுள்ளார். - படம்: சாவ் பாவ்

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சனிக்கிழமை (டிசம்பர் 7) நண்பகல் வாக்கில் கட்சியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று, கட்சியின் செய்தி மடலை திரு லோ விநியோகிப்பதைக் காட்டியது.

அப்போது, திரு லோ ஓய்வுபெற்றுவிட்டாரா அல்லது அடுத்த தேர்தலில் போட்டியிடப் போகிறாரா எனக் குடியிருப்பாளர் ஒருவர் அவரிடம் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திரு லோ, 68, “நான் ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்டேன். தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

“கட்சியை முன்னெடுத்துச் செல்ல எங்களிடம் ஓர் இளம் தலைமுறை உள்ளது. அவர்களால் என்னைவிட நன்றாகச் செய்ய முடியும்,” என்றார்.

சிங்கப்பூரில் 2025 நவம்பருக்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

1982ல் பாட்டாளிக் கட்சியில் சேர்ந்த திரு லோ, 1991 பொதுத் தேர்தலில் ஹவ்காங் தனித்தொகுதியை வென்றபோது கட்சியின் உதவித் தலைமைச் செயலாளராக இருந்தார்.

1997, 2001, 2006ல் மேலும் மூன்று தவணைக் காலத்துக்கு ஹவ்காங் எம்.பி.யாக அவர் தேர்வுசெய்யப்பட்டார். மே 2001ல் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளரான அவர், 2001, 2006 தேர்தல்களில் கட்சித் தலைவராகப் போட்டியிட்டார்.

பின்னர் ஹவ்காங் தொகுதியில் எம்.பி. பொறுப்பைக் கைவிட்டு திரு பிரித்தம் சிங், திருவாட்டி சில்வியா லிம், திரு ஃபைசல் மனாப், திரு சென் ஷோவ் மாவ் ஆகியோர் இடம்பெற்ற குழுவின் ஒரு பகுதியாக 2011 பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் திரு லோ போட்டியிட்டு வென்றார். குழுத்தொகுதி ஒன்றில் வென்ற முதல் எதிர்க்கட்சிக் குழுவாக பாட்டாளிக் கட்சிக் குழு திகழ்ந்தது.

2015 தேர்தலிலும் அல்ஜுனிட் குழுத்தொகுதியை அக்கட்சி வென்றது. தொடர்ந்து ஆறாவது முறையாக திரு லோ எம்.பி.யாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

2018ல் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய திரு லோ, கட்சித் தலைமையை ஏற்க திரு சிங்கிற்கு அவர் வழிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்