தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைந்த கட்டணம், புதிய நிபந்தனைகளுடன் மீண்டும் ‘கார்ட்லைஃப்’

2 mins read
28986fb6-440b-4ddc-b0c5-525dad926d3c
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கார்ட்லைஃப் செயல்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தொப்புள்கொடி ரத்த வங்கியான ‘கார்ட்லைஃப்’ நிறுவனம் ஒன்பதரை மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும்செயல்படத் தொடங்கியது.

அந்நிறுவனத்தின் சேவைகளும் செயல்பாடுகளும் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள தரநிலையை எட்டுவதற்காக அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

தற்போது சில நிபந்தனைகளுடன் அந்நிறுவனம் மீண்டும் இயங்க பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது. முதல் ஆறுமாத காலத்துக்கு, ஒவ்வொரு மாதமும் 30க்கும் மேற்படாத புதிய தொப்புள்கொடி ரத்த அலகுகளை மட்டுமே பெற அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இது, கார்ட்லைஃப் வழக்கமாகப் பெற்று வந்த 400 அலகுகளில் பத்து விழுக்காட்டுக்கும் குறைவு.

இருப்பினும், குழந்தை பிறப்புக்கு ஒருசில பெற்றோர்களே பதிவு செய்துள்ளதால் இந்த நிபந்தனை இப்போதைக்கு அந்த நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

கார்ட்லைஃப் வங்கியின் 22 ரத்த சேமிப்புக் கலன்களில் ஏழின் வெப்பநிலை உகந்ததாக இல்லாததால் 7,500 குமிழ் தொப்புள்கொடி ரத்தம் பாழானதாகக் 2023 நவம்பரில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆறுமாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டன.

தடைக் காலகட்டத்தில் நிறுவனம் புதிய தொப்புள்கொடி ரத்தங்களை வாங்குவது, சோதிப்பது, சேமிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

அந்த இடைநீக்கம் ஜூன் 15ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது.

கார்ட்லைஃப் நிறுவனம், தொப்புள்கொடி ரத்தம் சேமிக்கப்படும் நடைமுறையை சரிபார்க்க மேலும் அவகாசம் தேவைப்பட்டதால் அந்த நீட்டிப்பு செய்யப்பட்டது.

தேவையான நடைமுறைகளை செய்து முடிக்கவும் தரவுகளை சரியாக சோதிப்பது, ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் அந்த மூன்று மாத கால அவகாசம் தேவைப்பட்டதாக கார்ட்லைஃப் குறிப்பிட்டது.

சிறப்பான முறையில் தொப்புள்கொடி ரத்த சேமிப்புக்குத் தேவையான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியிருந்தது.

இதற்கிடையே, கார்ட்லைஃப் தனது கட்டணத்தைக் குறைத்து உள்ளது. பிரச்சினையில் சிக்குவதற்கு முன்னர் இருந்த கட்டணத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 20 விழுக்காடு முதல் 25 விழுக்காடு வரை குறைவான கட்டணத்தை அது நிர்ணயித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்