குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளம் வேக வளர்ச்சி: மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது

2 mins read
f5449389-5c8b-4f97-b222-924eb76a3954
பணவீக்கம் உயர்ந்தபோதும் குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒட்டுமொத்த ஊழியரணியைவிட குறைந்த வருவாய் ஊழியர்களின் வருமானம் உயர்ந்துள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்த ஊழியர்களை கைதூக்கிவிட எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடியுள்ளதாக கூறப்படுகிறது. துப்புரவாளர்கள், பாதுகாவலர்கள், சில்லறை விற்பனை ஊழியர்கள் உட்பட்டோர் குறைந்த வருமான ஊழியர்களாக உள்ளனர்.

படிப்படியாக உயரும் சம்பளத் திட்டத்தின் வழி இவர்களுக்கு சம்பள உயர்வின் பெரும்பகுதி கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) பேசிய மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது குறிப்பிட்டார்.

இந்தப் பிரிவினர் ஊழியரணியில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினராக உள்ளனர். இவர்களின் ஊதியம் 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக 5.9 விழுக்காடு உயர்ந்துள்ளதாகத் துணை அமைச்சர் தெரிவித்தார். இதுவே, மற்ற சராசரி ஊழியர்களின் ஊதிய உயர்வு 3.6 விழுக்காடு என்றும் அவர் விளக்கினார்.

இதனால், வாழ்க்கைச் செலவினம் உயர்ந்துள்ளபோதிலும் குறைந்த வருமான ஊழியர்களின் ஊதியம் அதைவிட அதிகமாக உயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய திரு ஸாக்கி, சராசரி ஊழியர்களின் ஊதியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றாலும் அவர்களுக்கும் குறைந்த வருமான ஊழியர்களுக்கும் இடையிலான வருமான வித்தியாசம் குறைந்து வருவதாகக் கூறினார்.

படிப்படியாக உயரும் சம்பளத் திட்டத்தின் தாக்கம் குறித்து ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு திரு ஸாக்கி பதிலளித்துப் பேசியபோது மேற்கண்ட விவரங்களை வெளியிட்டார்.

படிப்படியாக உயரும் சம்பளத் திட்டம் துப்புரவுத் துறையை மையமாக வைத்து 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின் திட்டம் பாதுகாப்புத் துறை, நிலவனப்புத் துறை ஆகியவற்றுக்கு விரிவுபடுத்தப்பட்டது. பின்னர், 2021ஆம் ஆண்டு அது சில்லறை வர்த்தகம், உணவு, பானத் துறை மற்றும் கழிவு நிர்வாகத் துறைக்கும் கொண்டு செல்லப்பட்டது. தொழில் சார்ந்த படிப்படியாக உயரும் சம்பளத் திட்டம் நிர்வாகிகள், ஓட்டுநர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியது.

இந்தப் படிப்படியாக உயரும் சம்பளத் திட்டத்தின்கீழ் வராத ஊழியர்களுக்கு முதலாளிகள், வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் சேர்க்க விரும்பினால், அவர்கள் கட்டாயமாக குறைந்தபட்ச தகுதியான சம்பள முறையை அமல் செய்ய வேண்டும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்