செகார் எல்ஆர்டி நிலையத்தில் ரயில்முன் விழுந்த ஆடவர் மரணம்

4 மணி நேரத் தடைக்குப் பிறகு ரயில் சேவை தொடங்கியது

செகார் எல்ஆர்டி நிலையத்தில் ரயில்முன் விழுந்த ஆடவர் மரணம்

2 mins read
03b22c98-04a9-4ada-9b97-41cb6610b924
செகார் எல்ஆர்டி நிலையத்திலிருந்து அகற்றப்படும் ஆடவரின் சடலம். - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 3

செகார் எல்ஆர்டி நிலையத்தில் திங்கட்கிழமை (மே 18) காலை தண்டவாளத்தில் விழுந்த 68 வயது ஆடவர் மாண்டுவிட்டார்.

அதனால், புக்கிட் பாஞ்சாங் தடத்தில், செஞ்சா - புக்கிட் பாஞ்சாங் நிலையங்களுக்கு இடையே இலகு ரயில் சேவை ஏறக்குறைய நான்கு மணி நேரம் தடைபட்டது.

செகார் எல்ஆர்டி நிலையத்திலிருந்து உதவி கேட்டு காலை மணி 5:50க்கு அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

காலை 5 மணியளவில் நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த ரயிலின் முன்புறம் ஆடவர் ஒருவர் விழுந்தது புலனாய்வில் தெரியவந்தது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சம்பவம் குறித்துத் தங்களுக்குக் காலை மணி 6.25க்குத் தகவல் கிடைத்ததாகச் சொன்னது. ஆடவர் மாண்டதைக் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

எஸ்எம்ஆர்டி நிறுவனம், சேவைத்தடை குறித்து ஃபே‌‌ஸ்புக்கில் காலை மணி 6.52க்குப் பதிவிட்டிருந்தது. அதன் பின்னர், காலை மணி 7.08க்கு அது வெளியிட்ட இன்னொரு பதிவில், செகார் நிலையத்திற்கு அருகே காலை 5 மணி அளவில் ஆடவர் ஒருவர் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்ததாகத் தெரிவித்தது. பின்னர், அதே பதிவைப் புதுப்பித்த எஸ்எம்ஆர்டி, தண்டவாளத்தில் ஆடவர் விழுந்துகிடப்பதைக் காணமுடிந்ததாகக் குறிப்பிட்டது. “பெட்டிர் - செஞ்சா நிலையங்களுக்கு இடையில் ரயில் சேவை இரு திசைகளிலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பாகத் தண்டவாளத்தை அணுகிப் புலன் விசாரணை மேற்கொள்ள அது வழிவிடும்,” என்று நிறுவனம் தெரிவித்திருந்தது. செஞ்சா - புக்கிட் பாஞ்சாங் நிலையங்களுக்கு இடையில் சேவை தடைபட்டபோதும் சுவா சூ காங் - புக்கிட் பாஞ்சாங் நிலையங்களுக்கு இடையிலான சேவை வழக்கம்போல் தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில், வழக்கமான பேருந்துச் சேவைகளுடன் இலவச இணைப்புப் பேருந்துச் சேவைகளும் வழங்கப்பட்டதாக எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது.

செஞ்சா - பெட்டிர் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை இரு திசைகளிலும் வழக்கநிலைக்குத் திரும்பியதாக நிறுவனம் காலை மணி 10.17க்குத் தெரிவித்தது. இலவசப் பேருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

“எங்களின் பராமரிப்புக் குழுவினர், சிரமமான இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டுள்ளது. பயணிகளின் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று எஸ்எம்ஆர்டி ரயில்கள் பிரிவின் தலைவர் லாம் ‌ஷியாவ் காய் கூறினார்.

காவல்துறையினர் புலன்விசாரணையில் தொடர்ந்து உதவிவருவதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்