எல்ஆர்டி நிலையப் பாதுகாப்பு: தீவிர ஆய்வுக்கு உத்தரவு

எல்ஆர்டி நிலையப் பாதுகாப்பு: தீவிர ஆய்வுக்கு உத்தரவு

2 mins read
109a7580-f2cb-40d2-a54b-3b046a10b394
தானியங்கி முறையில் அல்லாமல் கைகளால் இயக்கப்படும் தடுப்புக் கதவுகள் மற்றும் தானியங்கிக் கயிறு தடுப்புகள் போன்ற மாற்று வழிகளின் சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எல்ஆர்டி நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் மறுஆய்வு செய்ய நிலப் போக்குவரத்து ஆணையத்துக்கும் பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் செகார் எல்ஆர்டி நிலையத்தில் நிகழ்ந்த மரணச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 18ஆம் தேதியன்று செகார் எல்ஆர்டி நிலையத்தில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலுக்கு முன் 68 வயது ஆடவர் விழுந்து உயிரிழந்தார்.

மேலும் சிறந்த தீர்வுகள் குறித்து ஆராய்வதை நிறுத்திவிடக்கூடாது என்பதை இச்சம்பவம் நினைவூட்டுவதாக தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்தார்.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சியாவ் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

செகார் எல்ஆர்டி நிலையத்தில் ஏற்பட்ட மரணச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதால் அது குறித்து மேல் விவரங்கள் வெளியிடமுடியாது என்றார் அவர்.

இதற்கிடையே, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

தானியங்கி முறையில் இயங்காத கைகளால் இயக்கப்படும் தடுப்புக் கதவுகள் மற்றும் தானியங்கிக் கயிறு தடுப்புகள் போன்ற மாற்று வழிகளின் சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

2023 ,2024ஆம் ஆண்டிலிருந்து எல்ஆர்டி தடங்களில் யாராவது அத்துமீறி நுழைந்தால் எச்சரிக்கும் காணொளிப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சியாவ் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
எல்ஆர்டிபாதுகாப்புநிலப் போக்குவரத்து ஆணையம்