சாங்கி நார்த்திலும் சாங்கி சவுத்திலும் வரவிருக்கும் புதிய வசதிகளுக்கான சாலை மேம்பாட்டுப் பணிகள் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கும்.
எதிர்கால சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் அந்த வசதிகளில் அடங்கும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் அந்தப் பணிகளுக்காக செப்டம்பர் 12ஆம் தேதி ஒட்டுமொத்தமாக $522.4 மில்லியன் மதிப்பிலான இரண்டு ஒப்பந்தங்களை, உள்ளூர்க் கட்டுமான நிறுவனமான ‘சாம்வொஹ்’க்கு வழங்கியது.
ஓர் ஒப்பந்தத்தின்கீழ், ‘சாம்வொஹ்’ நிறுவனம், சாங்கி நார்த்தில் உள்ள 5.5 கிலோமீட்டர் தூர இருவழி இரு தடச் சாலையை இருவழி நான்கு தடச் சாலையாக விரிவுபடுத்தும்.
மற்றோர் ஒப்பந்தம், சாங்கி சவுத்தில் உள்ள சாலைப் பணிகளுக்கானது. விமான நிலையத்துடன் இணைக்கும் சாங்கி மேம்பாலச் சாலையை ‘சாம்வொஹ்’ நிறுவனம மாற்றியமைக்கும். புதிய வாகனச் சுரங்கப்பாதையும் மேம்பாலமும் அங்கு அமைக்கப்படும்.
இரண்டாவது ஒப்பந்தத்தின்கீழ், அப்பர் சாங்கி மேம்பாலச் சாலைக்கும் சாங்கி மேம்பாலச் சாலைக்கும் இடையிலான தீவு விரைவுச்சாலையின் ஒரு பகுதி அகலமாக்கப்படும். அதோடு, சாங்கி மேம்பாலச் சாலைக்கும் தானா மேரா மேம்பாலச் சாலைக்கும் இடையே, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேக்கு இணையாக புதிய சாலை ஒன்றும் கட்டப்படும்.
முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அதிகரிக்கக்கூடிய பயணத் தேவைக்கு ஆதரவாக இருக்கவும் மேற்கொள்ளப்படும் சாங்கி வட்டாரப் போக்குவரத்து உட்கட்டமைப்புத் திட்டங்களில், இந்தச் சாலைப் பணிகளும் அடங்கும்.
2028 முதல் 2034 வரை கட்டங்கட்டமாக நிறைவுபெற்றதும், இந்தச் சாலைகள் அந்தப் பகுதியில் உள்ள தொழில்துறை, தொழில் வட்டாரங்களுக்கு வரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
லோயாங் அவென்யூ, தெலுக் பாக்கு ரோடு, நிக்கல் டிரைவ், சாங்கி கோஸ்ட் ரோடு ஆகியவை உள்ளடங்கும் சாங்கி நார்த்தில் உள்ள சாலையை அகலமாக்கும் பணி 2030க்குள் நிறைவுபெறும் என்று ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
புதிய 2.6 கிலோமீட்டர் நீளமான லோயாங் மேம்பாலம் 2028ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, விரிவுபடுத்தப்பட்ட சாலைகள் லோயாங் தொழில்துறைப் பேட்டை, சாங்கி விமானச் சரக்கு நிலையம், ‘ஏவியேஷன் லாஜிஸ்டிக்ஸ் பார்க்’ ஆகியவற்றுக்குச் சேவையாற்றும் என்று ஆணையம் கூறியது.
புதிய சாலைகள், லோயாங், பாசிர் ரிஸ் ஈஸ்ட் என எதிர்வரும் இரண்டு குறுக்குத் தீவுப் பாதையின் ரயில் நிலையங்களுக்கும் சேவையாற்றும்.
அத்துடன், அவை லோயாங்கிலும் சாங்கி நார்த்திலும் உள்ள 3 கிலோமீட்டர் நீளமான புதிய சைக்கிளோட்டப் பாதைகளுக்கும் இட்டுச்செல்லும். இவை அனைத்தும் 2030ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று ஆணையம் தெரிவித்தது.