பொதுப் பேருந்துப் பாதுகாப்பை மேம்படுத்த கருத்துக்கணிப்பு

பொதுப் பேருந்துப் பாதுகாப்பை மேம்படுத்த கருத்துக்கணிப்பு

3 mins read
86a4aade-329a-444e-84c8-bc2c51af7d9a
பொதுப் பேருந்துப் பாதுகாப்பு குறித்த உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் https://go.gov.sg/bussafetyfeedback என்ற இணைய முகவரியில் அளிக்கலாம். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுப்பேருந்துகள் தொடர்பான அண்மைய விபத்துகளைத் தொடர்ந்து, பொதுப் பேருந்துகளுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தப்படுகிறது.

இதன் மூலம் பொதுப்பேருந்துப் பயணத்தின்போது, அவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக உணர்கின்றனர் என்பதை மதிப்பீடு செய்யலாம். அத்துடன் இப்போதுள்ள பாதுகாப்பை எந்தெந்த வழிகளில் மேம்படுத்தலாம் என்றும் அவர்கள் ஆலோசனைகளை வழங்கலாம். அதற்காக நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகஸ்ட் 23ஆம் தேதி, இணையம் வழி ஆய்வைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துணை அமைச்சர் முரளி பிள்ளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பொதுப் பேருந்தின் பாதுகாப்பு குறித்து சிங்கப்பூரர்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகக் கூறலாம். இது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை அறிய அதிகாரிகளுக்குப் பெரிதும் உதவும். இதனால் பொதுப் பேருந்து ஓட்டுநர்களும் அவற்றில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமின்றி சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று அவர் அந்தப் பதிவில் கூறினார்.

பேருந்து பாதுகாப்பு முத்தரப்புப் பணிக்குழுவிற்கு திரு முரளி பிள்ளை தலைமை வகிக்கிறார். அக்குழு மேற்கொள்ளும் பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளில் இந்த ஆய்வும் ஒன்றாகும்.

இந்த ஆய்வு, பேருந்து தொழில்துறை மேலும் முன்னேற்றங்களைச் செய்வதற்கான வழிகளை அடையாளம் காணவும், பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உருவாக்கவும் வழிசெய்கிறது.

பேருந்துப் பயணப் பாதுகாப்பை மேம்படுத்த எதிர்வரும் மாதங்களில் என்னென்ன வழிவகைகளைக் காணலாம் என்பது குறித்த கருத்துகளுக்காக பயணி, பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை பணிக்குழு ஈடுபடுத்தும் என்று திரு முரளி பிள்ளை ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

பணிக்குழுவில் அரசாங்க அமைப்புகள், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அனைத்து நான்கு பொதுப்பேருந்து நிறுவனங்கள், சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி பேருந்துகள், கோஅஹெட் சிங்கப்பபூர், டவர் டிரான்சிட் சிங்கப்பூர் ஆகியவை அந்த நான்கு நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் சுமார் 5,800 பொதுப் பேருந்துகளை இயக்குகின்றன.

பொதுப் பேருந்துகள் சம்பந்தப்பட்ட பல விபத்துகளைத் தொடர்ந்து ஆக அண்மைய முயற்சி இடம்பெறுகிறது. ஜூன் மாதத்தில் இதுபோன்ற குறைந்தது ஐந்து விபத்துகள் நிகழ்ந்தன.

கடந்த சில ஆண்டுகளாக பொதுப் பேருந்துகள் தொடர்பான கடுமையான விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் நிலையாக இருப்பதாக அரசாங்கம் முன்பு கூறியிருந்தது.

2024ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இத்தகைய 75 விபத்துகள் நிகழ்ந்தன. ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டு முழுவதும் 207 விபத்துகளும் 2022ஆம் ஆண்டு முழுவதும் 207 விபத்துகளும் நிகழ்ந்தன.

ரயில், பேருந்து நடவடிக்கைகளுக்கான வேலையிடக் காயங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் திரு முரளி சுட்டினார். 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதுபோன்ற 37 சம்பவங்கள் நிகழ்ந்தன. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 49 ஆக இருந்தது, திரு முரளி, ஆகஸ்ட் 23ஆம் தேதி பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விருதுகளுக்கான சடங்கு ஒன்றிலும் உரையாற்றினார்.

அப்போது அவர், “வேலையிடக் காயங்களை மேலும் குறைக்க, நாம் விழிப்புடன் பாதுகாப்பு மேம்பாடுகளைக் கட்டிக்காக்க வேண்டும்,” என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

“ஒரு விபத்துதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது, ஒவ்வொரு விபத்தும் அளவுக்கு அதிகமான விபத்து,” என்ற மனப்போக்கு இருப்பது முக்கியம் என்றும் திரு முரளி கூறினார்.

“ஏதேனும் விபத்து நிகழும்போதெல்லாம், நாம் ஒன்றிணைந்து அதற்கான மூல காரணங்களை கண்டறிந்து, பாதுகாப்பு மேம்பாடுகளைச் செயல்படுத்துவது மிக முக்கியம். அப்போதுதான் பூஜ்ஜிய விபத்துகள் என்ற நமது கூட்டு இலக்கை நம்மால் எட்ட முடியும்,” என்றும் அவர் கூறினார்.

பொதுப் பேருந்துப் பாதுகாப்பு குறித்த கருத்துகளையும் ஆலோசனைகளையும் https://go.gov.sg/bussafetyfeedback என்ற இணைய முகவரியில் அளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்