போக்குவரத்துக் குற்றங்கள், சாலைக் கட்டமைப்பு தொடர்பான குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களைப் பயன்படுத்துவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.
இது உறுதி செய்யப்பட்டால் எதிர்காலத்தில் பேருந்துகளில் உள்ள கிட்டத்தட்ட 6,000 கேமராக்கள் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டுபிடிக்கும் கட்டமைப்பாகப் பயன்படுத்தப்படும்.
காணொளிப் பகுப்பாய்வு முறை போன்ற பரிந்துரைகளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அழைப்பு விடுத்ததை அடுத்து, இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டுபிடிக்கும் வழிவகைகளைக் கண்டறிய ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட நேரங்களில் பேருந்துத் தடங்களில் பயணம் செய்யும் வாகனங்கள், மற்ற வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு வழிவிடும் இடங்களில் வழிவிடாத வாகனங்கள், சட்டவிரோதமான முறையில் வாகனங்களை நிறுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
புதிய அணுகுமுறை, விதிமீறும் வாகனத்தின் வகை, வண்ணம், வாகன எண் போன்றவற்றைப் பதிவு செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.
ஏலக்குத்தகை ஆவணத்தில் இருப்பது போலவே வாகனம் தொடர்பான விவரங்களை அது பதிவு செய்ய வேண்டும்.
போக்குவரத்துக் குற்றங்கள் மட்டுமின்றி, சாலைக் கட்டமைப்பு தொடர்பான குறைபாடுகளையும் புதிய அணுகுமுறை கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குறைபாடுகளைச் சரிசெய்ய ஆணையம் எடுத்துக்கொள்ளும் நேரத்தை அது மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவற்றுக்கான பரிந்துரைகளுக்கு அக்டோபர் 7ஆம் தேதியன்று GeBIZ எனும் அரசாங்கக் கொள்முதல் இணையவாசல் மூலம் ஆணையம் அழைப்பு விடுத்தது.
சாலைகளைக் கடக்கக்கூடாத இடங்களில் சாலையைக் கடப்பவர்களைக் கண்டுபிடிக்கவும் பாதசாரிகள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை அடையாளம் காணவும் ஆணையம் விரும்புகிறது.
தற்போதைய நிலவரப்படி பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் பேருந்துகளின் சேவை நேரத்தின்போது மட்டுமே பதிவு செய்கின்றன.
காணொளிப் பதிவுகளைப் பேருந்துகளில் உள்ள பதிவு இயந்திரங்களிலிருந்து மீட்க வேண்டும்.
பொதுவாக, அவை விபத்துகள் குறித்து நடைபெறும் விசாரணைக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.
சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு அம்சமும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பல்வேறு போக்குவரத்துக் குற்றங்கள், சாலைக் கட்டமைப்பு தொடர்பான குறைபாடுகள் ஆகியவற்றை அவை தானியங்கி முறையில் ஸ்கேன் செய்து கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

