மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறச் சிங்கப்பூரில் தொடர்ந்து உக்குவிக்கப்படுகின்றனர்..
அதன் ஒருபகுதியாக நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) வாகன வாயு வெளியேற்றத் திட்டம் (VES), மின்சார வாகனங்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள பதிவுக் கட்டண ஊக்குவிப்புத் தொகை (EEAI) ஆகியவற்றை நீட்டித்தும் மாற்றியமைத்தும் உள்ளது.
வரும் ஜனவரி மாதம் முதல் புதிதாக மின்சார வாகனம் வாங்குபவர்கள் EEAI மற்றும் VES ஆகிய இரண்டு திட்டங்களையும் பயன்படுத்தி 30,000 வெள்ளி வரை மானியம் பெறலாம். தற்போது அது 40,000 வெள்ளியாக உள்ளது.
பெட்ரோல் ஹைபிரிட் கார்களுக்கு இனி வாகன வாயு வெளியேற்றத் திட்டம் மூலம் மானியம் வழங்கப்படாது.
அதேபோல் 2026ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கான வாகன வாயு வெளியேற்றத் திட்டக் கட்டணம் 35,000 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அது 25,000 வெள்ளியாக உள்ளது. மேலும் அது 2027ஆம் ஆண்டு 45,000 வெள்ளியாக அதிகரிக்கப்படும்.
EEAI திட்டம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டில், EEAI திட்டம் நிறுத்தப்படும்.
இத்திட்டம் 2021ஆம் ஆண்டு 20,000 வெள்ளி வரையிலான மானியம் என்ற அடிப்படையில் அறிமுகம் கண்டது. பின்னர் அது 2024, 2025 காலகட்டத்திற்கு 15,000 வெள்ளியாக மாற்றப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கு 7,500 வெள்ளியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் பதிவான புதிய வாகனங்கள் எண்ணிக்கையில் 80 விழுக்காடு மின்சார, ஹைபிரிட் வாகனங்கள் ஆகும். இதில் 50 விழுக்காடு மின்சார வாகனங்கள் ஆகும்.
EEAI மற்றும் VES திட்டங்களுக்கான உதவியும் மானியமும் இவ்வாண்டு இறுதியுடன் முடிவுற இருந்த நிலையில் தற்போது அவை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) வெளியிட்டது.
“ 2040ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் தூய்மையான எரிசக்தி, மாசு இல்லாத வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும், அதற்காக இந்த இரு திட்டங்களும் நீட்டிக்கப்படுகின்றன,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

