சிங்கப்பூரில் உள்ள பேருந்துகளில் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள கேமராக்களைப் பயன்படுத்தி சாலை விதிகளைமீறும் வாகனவோட்டிகளை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட கட்டமைப்பு ஒன்றை நிலப் போக்குவரத்து ஆணையம் அறிமுகம் செய்யவிருக்கிறது.
அந்தக் கட்டமைப்பு மூலம் சாலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைக் கண்டறிய ஆணையம் முற்படுகிறது.
பேருந்துகளுக்கான தடங்களில் வாகனத்தை ஓட்டுவோரையும் சாலை ஓரங்களில் சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்துவோரையும் அந்தக் கட்டமைப்பால் கண்டறிய முடியும். அத்துடன் சாலை கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளுடன் வீதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளும் அடையாளம் காணப்படும்.
சாலையில் ஏற்படக்கூடிய வெவ்வேறு சம்பவங்களின் அடிப்படையில் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் கிட்டத்தட்ட 90 விழுக்காடுவரை நிறைவேறியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பேருந்துப் பாதைகளுக்கும் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும்.
பேருந்துக் கட்டமைப்பில் உள்ள கண்காணிப்புத் திறன்களைச் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு மேலும் மேம்படுத்தும் என்று சுட்டிய ஆணையம், தேவைக்கு ஏற்ப உடனடி திருத்தங்களையும் அமலாக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டது.
“தொழில்நுட்பத் தீர்வுகள் பேருந்து ஓட்டுநர்களின் பணிகளைக் குறைப்பதிலும் பாதுகாப்பிற்கான அபாயங்களை எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதன் அடுத்த கட்டத்தை எட்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்க முடியும்,” என்று போக்குவரத்து, தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சுன் ஷுவேலிங் கூறினார்.
‘ஒன் பொங்கோல்’ வளாகத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சுன் பேசினார்.
பேருந்துத் தடங்களில் செல்லும் பிற வாகனங்கள்மீது மோதுவதைத் தவிர்க்க பேருந்து ஓட்டுநர்கள் சில நேரங்களில் திடீரென ‘பிரேக்’ஐ அழுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது. செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு மூலம் அந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுன் மேலும் கூறினார்.
நிலப் போக்குவரத்து அமைச்சு, முழுமையான தானியக்க பாதுகாப்பு ஒலி அறிவிப்புகளை அனைத்துப் பேருந்துகளிலும் 2027ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து கட்டங்கட்டமாகப் பொருத்தும்.
அவை பேருந்து புறப்படுவதற்கு முன்பாகப் பயணிகள் கைப்பிடிகளையும் தூண்களையும் பிடித்துக் கொள்ளுமாறு நினைவூட்டும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், முன்னோட்டமாக அந்த அறிவ்ப்புகள் 11 பேருந்துச் சேவைகளில் சோதிக்கப்பட்டது. அந்தப் புதிய அம்சத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஆணையம் தெரிவித்தது.
இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாகப் பயணம் செய்யும் 54 பேருந்து சேவைகளை மறுஆய்வு செய்ய பேருந்து நிறுவனங்களுடன் ஆணையம் இணைந்து பணியாற்றுகிறது.
“தொடர்ச்சியாக பேருந்தை ஓட்டுவதால் ஏற்படும் சோர்வைக் குறைக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் இரண்டு மணிநேரத்திற்கும் மேலான பயண நேரத்தைக் கொண்ட 10 வழித்தடங்களில் பேருந்து ஓட்டுநர்களின் ஓட்டுநர் நேரத்தைக் குறைத்துள்ளோம்,” என்று சுன் குறிப்பிட்டார்.
பேருந்து ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க வசதியாக வழித்தடத்தை மாற்றி அமைப்பது அல்லது வழித்தடத்தின் நடுவில் ஓட்டுநரை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளும் அதில் அடங்கும்.
பேருந்து ஓட்டுநர்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்கவும் பேருந்து பாதுகாப்பை உயர்த்தவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேருந்து பாதுகாப்பு முத்தரப்பு பணிக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளில் அந்த நடவடிக்கைகளும் உண்டு என்று சுன் சுட்டினார்.


