செப்டம்பர் 25 முதல் 30ஆம் தேதி வரை கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஆறு நாள்கள் சேவைத் தடங்கல் ஏற்பட்டிருந்தது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பழுதடைந்த ரயிலுக்குக் கீழ்ப் பகுதியிலிருந்து அச்சாணிப் பெட்டி விழுந்ததற்கான மூலக் காரணம், தவறு கண்டறிதல் நடைமுறைகள், சேவை மீட்பு முயற்சிகள் ஆகியவற்றை அந்த விசாரணை உள்ளடக்கும்.
விசாரணை முடிய சில மாதங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விசாரணையில் கண்டறியப்படும் தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும் என்று ஆணையம் அக்டோபர் 2ஆம் தேதி அன்று தெரிவித்தது.
கண்டறியப்படும் தகவல்களை மறுபரிசீலனை செய்வதற்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஒரு நிபுணர் ஆலோசனைக் குழுவையும் நியமிப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதலில், ரயிலுக்குக் கீழ்ப் பகுதியிலிருக்கும் அச்சாணிப் பெட்டி ஏன் பழுதுபட்ட ரயிலில் இருந்து விழுந்தது என்பதற்கான அடிப்படைக் காரணத்தை ஆணையம் ஆராயும். அச்சாணிப் பெட்டி செயலிழந்ததன் தன்மை குறித்து தடயவியல் ஆய்வு செய்து பிற சாத்தியமான காரணிகளையும் ஆணையம் கண்டறியும்.
இரண்டாவதாக, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய சம்பவத்தின் போது தவறு கண்டறிதல் மற்றும் சம்பவத்தைக் கையாளும் நடைமுறைகளை அது ஆய்வு செய்யும்.
தற்போதுள்ள நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதன் மூலமும், அத்தகைய தவறுகளைக் கண்டறிவதை மேம்படுத்துவதற்கும், சேவைகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கும், ரயில் உள்கட்டமைப்பிற்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்மொழிவதன் மூலமும் இது மேற்கொள்ளப்படும்.
மூன்றாவதாக, ரயில் நடத்துநரான எஸ்எம்ஆர்டி எடுத்த நடவடிக்கைகள் வேகமாகவும் விரிவானதாகவும் இருந்ததா என்பதைச் சரிபார்க்க, சேவை மீட்பு முயற்சிகளையும், இடையூறுகளின் போது எடுக்கப்பட்ட இடைக்கால நடவடிக்கைகளையும் நிலப் போக்குவரத்து ஆணையம் மதிப்பாய்வு செய்யும்.
தொடர்புடைய செய்திகள்
இணைப்புப் பேருந்து சேவைகளின் வேகம், இடையூறு குறித்த அறிவிப்புகளின் செயல்திறன், இணைப்புப் பேருந்து மற்றும் துணை ரயில் சேவைகள் போன்ற மாற்று போக்குவரத்துத் தெரிவுகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதலின் தெளிவு, அத்துடன் ஒட்டுமொத்த பயணிகள் மேலாண்மை ஆகியவை மதிப்பாய்வில் அடங்கும்.
இதைத் தவிர, தனது போக்குவரத்துப் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு, இடையூறு குறித்து சுயேச்சையான பாதுகாப்பு விசாரணையை மேற்கொள்ளும் என்று போக்குவரத்து அமைச்சு அக்டோபர் 2ஆம் தேதி தெரிவித்தது.

