பிஆர்டி எனப்படும் பெருவிரைவு பேருந்துச் சேவையை வழங்குவது குறித்து ஆராயப்பட்டுவருகிறது.
துவாஸ் சவுத் வட்டாரத்தில் அச்சேவையை வழங்குவது குறித்து ஆராயப்பட்டுவருகிறது. அவ்வட்டாரத்தில் உள்ள பகுதிகளுக்குச் சென்றுவருவதற்கான வழிமுறைகளுக்கு மெருகூட்டுவதே நோக்கம் என்று போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்தார்.
பேருந்து அல்லது டிராம்
வெள்ளிக்கிழமை (ஜூலை 31) ரயில் சோதனை நிலையத்துக்குச் சென்றபோது அவர் பேசினார். பிஆர்டி சேவைகள், பெரும்பாலும் அதிக ஆற்றல் கொண்ட பேருந்துகள் அல்லது தண்டவாளம் இல்லாமல் ஓடும் டிராம் வாகனச் சேவையாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவற்றுக்கென ஒதுக்கப்படும் சாலைத் தடங்களில் ஓடும்போது அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் திரு சியாவ் தெரிவித்தார். அவற்றில் வேகமாக ஏறி இறங்குவதற்கான நிலையங்களும் அமைக்கப்படலாம் என்றும் அவர் விவரித்தார்.
தங்களின் வேலையிடங்களுக்கும் தற்போதுள்ள மற்றும் வருங்காலத்தில் நடப்புக்கு வரவுள்ள எம்ஆர்டி நிலையங்களுக்கும் குறைந்த நேரத்தில் பயணம் செய்ய பிஆர்டி சேவை வகைசெய்யும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தெரிவித்தது.
வளர்ந்துவருத் துவாஸ் சவுத்
துவாஸ் துறைமுகம் போன்ற திட்டங்கள் இருப்பதும் மேலும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதும் இச்சேவைக்கு துவாஸ் சவுத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள். கூடுதல் வர்த்தகங்கள் அங்கு செயல்பட்டு அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்போது பயணிகள் எண்ணிக்கையும் பயணத் தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் சொன்னது.
ஏற்கெனவே சேவை வழங்கிவரும் எம்ஆர்டி, பேருந்துச் சேவைகளுடன் பிஆர்டி சேவைகள் நடுத்தர கொள்ளளவைக் கொண்ட போக்குவரத்துத் தெரிவாக விளங்கக்கூடும் என்றும் ஆணையம் கூறியது.
சாலையில் குறிப்பிட்ட தடங்களில் சென்று போக்குவரத்தில் முன்னுரிமை வழங்கப்படும்போது பிஆர்டி வாகனங்கள் சாதாரண பேருந்துகளைக் காட்டிலும் மேலும் வேகமாகப் பயணம் செய்ய முடியும். அதேநேரத்தில் கூடுதலான பயணிகளையும் அவை ஏற்றிச்செல்லக்கூடும். குறிப்பாக உச்சநேரத்துக்கு இது பொருந்தும்.
எம்ஆர்டி, இலகு ரயில் சேவைகளுடன் (எல்ஆர்டி) ஒப்பிடுகையில் பிஆர்டி சேவைக்கு தனிப்பட்ட உள்கட்டமைப்பு தேவைப்படாது. அதோடு, பாதைகளை மாற்றுவதன் தொடர்பில் பிஆர்டி சேவையில் கூடுதல் நீக்குப்போக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஆர்டி சேவைகள் பொதுவாக சாதாரண பிஆர்டி, டிராம் வகை பிஆர்டி என்று இரு பிரிவுகளுக்குக்கீழ் வரும்.

