சிங்கப்பூர் நகர்ப் பகுதிகளையும் சாங்கி விமான நிலையத்தையும் இணைக்கும் பேருந்து சேவையாக ‘எண் 36’ உள்ளது.
இந்நிலையில், பேருந்து எண் 36ல் உள்ள சில பேருந்துகளில் 2027ஆம் ஆண்டு முதல் பயணப் பெட்டிகளை வைக்கும் அடுக்கு வசதிகள் அறிமுகம் செய்யப்படுகிறது.
அந்தத் தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஜூலை 22) வெளியிட்டது.
பயணிகள் பெட்டிகளை வைக்க மூன்று அடுக்குகள் கொண்ட அறைகலன் வசதி பேருந்தில் உள்ளது. மொத்தம் 12 ‘எண் 36’ பேருந்துகளில் அந்த வசதி இருக்கும்.
அந்தப் பேருந்துகள் கட்டங்கட்டமாகச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
இந்தப் பேருந்துகளில் பயணக்கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் அந்த அறைகலன்கள் பொருத்தப்படும் என ஆணையம் கூறியது.
பெட்டிகள் வைக்கும் அறைகலன்கள் வழுக்காத தரைத்தளம் கொண்டவையாக இருக்கும். மேலும் பெட்டிகள் உருண்டு செல்லாமல் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.
அறைகலன்கள் உள்ள பேருந்துகளில் சக்கர நாற்காலிகளுக்கான இடம் இருக்கும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் உறுதியளித்தது.
சாங்கி விமான நிலையத்திற்கும் நகர்ப் பகுதிக்கும் இடையே நேரடியாகச் செல்லும் ஒரே பேருந்து சேவையாக எண் 36 உள்ளது. அதனால்தான் அந்தப் பேருந்துச் சேவை தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்தப் பேருந்துச் சேவை, நகரத்தில் இருக்கும் பல ஹோட்டல்களுக்கு நேரடியாகச் செல்லும் வசதி கொண்டது. மற்ற பேருந்துப் பாதைகளைவிட ‘எண் 36’ பேருந்தில்தான் அதிகமான பயணிகள் பைகளுடன் பயணம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
‘கோ-அஹெட் சிங்கப்பூர்’ நிறுவனத்தால் இயக்கப்படும் ‘எண் 36’ பேருந்து, சாங்கி விமான நிலையத்தில் தொடங்கி ஆர்ச்சர்ட் ரோடு வரை சென்று மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்புகிறது.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை நடைபெற்ற மூன்று மாதச் சோதனைத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆணையம் கூறியது.

