விலைமாதர் கும்பலிடம் ஆடம்பர கார்கள், கைக்கடிகாரங்கள்; 28 பேர் கைது

2 mins read
917786cb-c9bc-4d70-8ecd-152ccd4e3e14
சோதனையில் சிக்கிய ஆடம்பர கார்கள். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சட்டவிரோத விலைமாதர் தொழிலுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு ஆடம்பர கார்களும் விலை உயர்ந்த 18 கைக்கடிகாரங்களும் சிக்கின.

அந்த நடவடிக்கையில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் பெண்கள்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 21 வயதுக்கும் 61 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.

அவர்களில் 30 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று ஆடவர்கள் மீது மாதர் சாசனச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. இணையம் மூலம் விலைமாதர் தொழில் செய்ய உதவியதற்கான குற்றச்சாட்டுகள் அவை.

சட்டவிரோத விலைமாதர் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த புதன்கிழமை (ஜூலை 30) சோதனை நடத்தப்பட்டது. அப்போது $610,000க்குமேல் பெறுமானமுள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் ஆடம்பர கார்களும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களும் அடங்கும்.

தோ தக் வட்டாரத்தில் உள்ள ஜாலான் லயாங் லயாங், பாசிர் பாஞ்சாங் ரோடு, பூன் லே அவென்யூ, தஞ்சோங் பகார் வட்டாரத்தின் கிரெய்க் ரோடு, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 71, பீச் ரோடு, தாய் செங் அவென்யூ. பென்கூலன் ஸ்திரீட், ரிவர் வேலி பகுதியில் உள்ள கிம் யாம் ரோடு, ஓனன் ரோடு, ஆர்ச்சர்ட் ரோடு, பாலஸ்டியர் ரோடு அருகே உள்ள ஜாலான் கெமாமான் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் விரிவான சோதனை நடத்தினர்.

ரொக்கப் பணம், வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், இரண்டு கைப்பேசிகள், மடிக்கணினிகள், விலைமாதர் தொழில் தொடர்பான சாதனங்கள் போன்றவையும் அந்தச் சோதனையில் சிக்கின.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்