சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலையில் நீண்டகாலமாகச் செயல்பட்டுவரும் ஹோட்டல்களில் ஒன்றான ஹாலிடே இன், ‘த ஹரி சிங்கப்பூர்’ என்ற சொகுசு ஹோட்டலாக அடுத்த ஆண்டு மீண்டும் திறக்கப்படவிருக்கிறது.
கேவனெக் சாலையில் 324 அறைகள் கொண்ட ஹாலிடே இன் ஹோட்டல், 1985ஆம் ஆண்டு முதல்முறையாகத் தனது கதவுகளைத் திறந்தது.
அது, கிராமாட் சாலைக்கும் கேவனெக் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில், கப்பேஜ் பிளாசாவுக்குப் பின்னால் அமைந்திருக்கிறது.
புதுப்பிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் ‘த ஹரி’ என்ற புதிய ஹோட்டல், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் அந்தச் சொகுசு ஹோட்டல் திறக்கப்படுவது இதுவே முதன்முறை. உலகளவில் இது மூன்றாவது ஹோட்டல்.
இதற்குமுன் ‘த ஹரி’ என்ற ஹோட்டல் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முறையாக லண்டனில் கால் பதித்தது. அதையடுத்து 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவதாக ‘த ஹரி’ ஹோட்டல் ஹாங்காங்கில் திறக்கப்பட்டது.
ஹரிலேலா குழுமத்தால் உருவாக்கப்பட்ட சொகுசு ஹோட்டலின் உட்புற அமைப்புகள், தாரா பெர்னெர்ட் என்ற பிரிட்டிஷ் வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டது.
லண்டனில் திறக்கப்பட்ட ‘த ஹரி’ ஹோட்டலில் 85 அறைகளும் ஹாங்காங்கில் உள்ள ஹோட்டலில் 210 அறைகளும் உள்ளன.
முக்கிய அனைத்துலக நாடுகளில் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஹரிலேலா குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஏரன் ஹரிலேலா கூறினார்.
இன்றைய சொகுசுப் பயணிகள் தனித்துவமான, சொகுசான ஹோட்டல்களை நாடுகின்றனர். ஆசியாவின் துடிப்புமிக்க நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரில் திறக்கப்படும் ‘த ஹரி’ ஹோட்டல் மக்களுக்கு சொகுசு அனுபவத்தைத் தரும் என்றார் அவர்.


