சிங்கப்பூர் வானில் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் ‘லிரிட்’ விண்கல் மழையைக் காணலாம். விண்கற்கள் ‘எரி நட்சத்திரங்கள்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு.
ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்வு இவ்வாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை சிங்கப்பூர் வானத்தை அலங்கரிக்க வருகிறது.
‘லிரிட்’ விண்கற்களைப் பின்னிரவு 1.00 மணிக்குப் பிறகு தெளிவாகப் பார்க்கலாம்.
அவ்வேளையில், ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 10 முதல் 20 விண்கற்கள் வரை காணலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவியல் நிலைய வான் ஆய்வுக்கூடம் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
‘லிரிட்’ விண்கற்கள் பொதுவாக நீண்ட தூசுப் பாதைகளை விட்டுச் செல்வதில்லை என்றாலும் அவை எப்போதாவது பிரகாசமான மின்னல்களை உருவாக்கக்கூடும் எனக் கூறப்பட்டது.
விண்கல் மழையைக் காணச் சிறப்புக் கருவிகள் தேவையில்லை என்று ஆய்வுக்கூடம் கூறியது.

