காலஞ்சென்ற முன்னாள் வழக்கறிஞர் ரவி மாடசாமி என்ற எம். ரவியுடன் போதைப்பொருள் உட்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட நண்பர்மீது வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) புதிய குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு (2025) டிசம்பர் 24 அல்லது அதற்கு முன்பு திரு ஷான் லூ ஷி ஜியான் எனும் அந்த 40 வயது நண்பர்மீது மெத்தம்ஃபெட்டமைன் போதைப்பொருளை உட்கொண்டதாக இப்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திரு லூவை வழக்கறிஞர் அஷ்வின் ஹரிஹரன் பிரதிநிதிக்கிறார். வழக்கு இம்மாதம் 28ஆம் தேதிக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள்களை உட்கொள்வதற்கு ஏற்பாடு செய்ததாக அவர்மீது முதலில் டிசம்பர் 26ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.
திரு லூ, அப்பர் பூன் கெங் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் திரு எம் ரவியுடன் டிசம்பர் 24ஆம் தேதி மெத்தம்ஃபெட்டமைன் போதைப்பொருளை உட்கொள்ள ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. அன்று பின்னிரவு ஒரு மணிக்கும் அதிகாலை 4 மணிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது.
56 வயது திரு ரவி, டிசம்பர் 24ஆம் தேதி காலமானார்.
அதே நாள் அந்த வீட்டில் சுயநினைவை இழந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்படும் முன்னர், நண்பருடன் போதைப்பொருள் உட்கொண்டதாகக் காவல்துறையினர் முன்னர் தெரிவித்திருந்தனர். அன்று அதிகாலை மணி சுமார் 5.40க்கு மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
சில மணிநேரத்திற்கு முன்பு திரு ரவியுடன் போதைப்பொருள் உட்கொண்டதாகச் சொன்ன நண்பரும் அங்கிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆடவரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கைதுசெய்தது. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட திரு ரவி, பின்னர் அங்குக் காலமானார்.
கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள்களை உட்கொள்ள ஏற்பாடு செய்யும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 பிரம்படியோடு 20 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.
போதைப்பொருள் உட்கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ $20,000 வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.

