தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்1 தொலைத்தொடர்பு வர்த்தகம்: சிம்பாவுக்கு $1.43 பில்லியனுக்கு விற்கவிருக்கும் கெப்பல்

2 mins read
5eb49a3b-794f-4654-8b4c-bf8904963e6c
எம்1 நிறுவனத்தில் 83.9 விழுக்காட்டை வைத்திருக்கும் கெப்பலுக்குக் கிட்டத்தட்ட $1 பில்லியன் கிடைக்கவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்துகளை நிர்வகிக்கும் கெப்பல் நிறுவனம் அதன் கீழ் இயங்கும் எம்1ன் தொலைத்தொடர்பு வர்த்தகத்தைப் போட்டி நிறுவனமான சிம்பா டெலிகாமிடம் விற்கவிருக்கிறது.

அதன் தொடர்பில் இரு நிறுவனங்களும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மதிப்பு, ரொக்கமும் கடனும் உட்பட, $1.43 பில்லியன். ஒப்பந்தத்தின் முடிவில் தொகையில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

எம்1 நிறுவனத்தில் 83.9 விழுக்காட்டுப் பங்கை வைத்துள்ளது கெப்பல். அதனால் கெப்பலுக்கு ஏறக்குறைய $1 பில்லியன் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

அதிவேகமாக வளர்ச்சிகண்டுவரும் தகவல், தொடர்புத் தொழில்நுட்ப வர்த்தகத்தை கெப்பல் தன்னிடமே தக்கவைத்துக்கொள்ளும். அதில் தரவு நிலையங்களும் கடலடிக் கம்பிவடங்களும் அடங்கும்.

பரிவர்த்தனையை அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவுசெய்யத் திட்டமிடுவதாகக் கூறியது கெப்பல். தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அதற்கு ஒப்புதல் கொடுத்தாக வேண்டும்.

புதிய உடன்பாட்டுக்குப் பங்குதாரர்களின் ஒப்புதல் தேவையில்லை என்றது கெப்பல். முன்மொழியப்பட்டுள்ள பரிவர்த்தனையின் மதிப்பு கெப்பலின் நிகரச் சொத்து, வரிக்கு முந்திய லாபம், சந்தை மூலதனம் ஆகியவற்றில் 20 விழுக்காட்டைவிட அதிகமாக இருக்காது என்பதே காரணம்.

சிம்பா பங்குதாரர்களின் ஒப்புதலும் தேவையில்லை என்றும் கெப்பல் சொன்னது. ஆஸ்திரேலியப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள துவாஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது சிம்பா.

“முன்வைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கப் பரிவர்த்தனை, சிங்கப்பூரின் தொலைத்தொடர்புத் துறையினருக்கும் பயனீட்டாளர்களுக்கும் பலன் தரும். நாட்டின் துடிப்புமிக்க இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையில் ஒருமித்த ஆற்றல்களைச் சிறந்த வகையில் பயன்படுத்துவதன் மூலமும் சந்தையை நிலைப்படுத்துவதன் மூலமும் அதனை எட்டமுடியும்,” என்று கெப்பல் அறிக்கையொன்றில் குறிப்பிட்டது.

சிங்டெல், ஸ்டார்ஹப் பங்கு விலைகள் வீழ்ச்சி

எம்1 நிறுவனத்தை விற்கப்போவதாகக் கெப்பல் அறிவித்ததைத் தொடர்ந்து சிங்டெல், ஸ்டார்ஹப் நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிந்தன.

சிங்டெல்லின் பங்கு விலை 1.3 விழுக்காடு அதாவது ஐந்து காசு குறைந்து $3.93 ஆனது. கிட்டத்தட்ட 18 மில்லியன் பங்குகள் கைமாறின.

ஸ்டார்ஹபின் பங்கு விலை 4.9 விழுக்காடு அதாவது 6 காசு இறங்கி $1.16 ஆயிற்று. ஏறக்குறைய 9 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) பங்குச் சந்தை திறக்கப்படும் முன்னர் கெப்பலின் பங்கு வர்த்தகம் நிறுத்திவைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி அதன் பங்கு விலை 0.8 விழுக்காடு குறைந்து $8.58 ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்