முஸ்லிம் சமூகத்தின் சமூக, பொருளியல் நிலையை உயர்த்தும் நோக்கில், சிங்கப்பூரின் முக்கியமான மூன்று மலாய்/முஸ்லிம் சமூக அமைப்புகளுக்கு இடையிலான ‘எம்3’ கூட்டுப் பங்காளித்துவம் விரிவாக்கப்படும்.
சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்), மெண்டாக்கி, பிஏ மெஸ்ரா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு இடையிலான இந்தப் பங்காளித்துவம், இந்த விரிவாக்கத்தின்கீழ் மற்ற இனக் குழுக்களைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்புகளுடனும் இணைந்து செயல்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் இதனைக் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 1,000 தொண்டூழியர்களின் ஆதரவுடன் இயங்கும் எம்3 திட்டத்தின்கீழ், சிங்கப்பூரின் பல்வேறு வட்டாரங்களில் செயல்படும் 11 ‘எம்3@டவுன்’ தளங்களால் 180,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக 2025ல் தகவல் வெளியிடப்பட்டது.
வளங்கள், பங்கேற்புக்கான ஆதரவு, நிபுணத்துவப் பயன்பாடு ஆகியவற்றுக்காக 11 எம்3@டவுன் தளங்களும் வெவ்வேறு இன முஸ்லிம் குழுக்களுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஹார்மனி பிரேக்ஃபாஸ்ட் @ நீ சூன்’ நிகழ்வுக்காக இந்திய முஸ்லிம் சமூகச் சேவை சங்கத்துடன் இணைந்து ‘எம்3@நீ சூன்’ செயல்பட்டது. இத்தகைய கூட்டுறவுகள் மேலும் வலுவடையும் என இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
இந்தக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த, ‘துனாஸ் பெர்சாமா எம்3’ திட்டம் வழியாக மெண்டாக்கி, அடுத்த தலைமுறையினரைத் தொடர்ந்து ஈடுபடுத்தி செயலாற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தகவல் பரிமாற்றம், உத்திபூர்வத் தொடர்பு வட்ட விரிவாக்கம், சமூக நன்மைக்கான கூட்டுத் திட்டம், மூத்த சமூகத் தலைவர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றின்வழி வருங்காலத் தலைவர்களுக்குத் திறனளிப்பதற்காக 2022ல் இத்திட்டம் அமைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தங்குதடையின்றி ஒரே தளத்திற்கு வேண்டுகோள்
இணைப் பேராசிரியர் ஃபைஷாலிடம் கேள்விகளை முன்வைத்த வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், மலாய் முஸ்லிம் அமைப்புகளுக்கும் இந்திய முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையிலான கூட்டுறவு வலுவாக வேண்டும் என வலியுறுத்தினார்.
“வலுவான மலாய் முஸ்லிம் மற்றும் இந்திய முஸ்லிம் அமைப்புகளையும், அர்ப்பணிப்புமிக்க பிற பங்காளிகளையும் பெற்றிருப்பது நமது வரம். இருப்பினும், தனித்தனியாக இணையான திட்டங்களை முன்னெடுக்கும்போது, சில நேரங்களில் ஒரே பயனாளர்களை மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள நேரிடலாம்.
“சேவைகளுக்கு இடையே இடைவெளி ஏற்படலாம் அல்லது எந்த அமைப்பு எந்தச் சேவையை வழங்குகிறது என்பதில் குழப்பம் உருவாகலாம். இங்குதான், ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதில் ‘எம்3’ வலையமைப்பு ஒரு நடைமுறை ஒருங்கிணைப்பாளராக முக்கியப் பங்காற்றுகிறது,” என்று டாக்டர் ஹமீது குறிப்பிட்டிருந்தார்.
தனிநபர், குடும்பங்களுக்கான உதவி ஒருங்கிணைந்த முறையில் கிடைப்பதை உறுதிசெய்ய, ‘தவறான கதவு இல்லை’ என்ற அணுகுமுறையைப் பின்பற்றக் கருதவும் அவர் கேட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் தமிழிலும் பேசிய டாக்டர் ஹமீது, எளிமையான வழிகாட்டுதலுடன் பகிரப்பட்ட தரவு முடிவுகளை உள்ளடக்கிய பொதுவான தளம் ஒன்றை மலாய் முஸ்லிம் அமைப்புகள், இந்திய முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு உருவாக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
எம்.பி. ஹஸ்லினா அப்துல் ஹலிமின் கேள்விகளுக்கும் பதிலளித்த பேராசிரியர் ஃபைஷால், கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான தேவையை ஒப்புக்கொண்டார்.
“எனவே, எம்3 கட்டமைப்பை நாம் விரிவுபடுத்தி, அதனை ‘எம்3 பிளஸ்’ என மறுபெயரிடுவோம்.
“களத்தில் ஏற்கெனவே சிறப்பான பணிகளை ஆற்றிவரும் மலாய் முஸ்லிம் அமைப்புகள், இந்திய முஸ்லிம் அமைப்புகள், பங்காளித்துவக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட தொண்டூழியர்களின் நிபுணத்துவ அறிவையும் சமூகத் தொடர்புகளையும் ‘எம்3 பிளஸ்’ திட்டம் சிறப்பாக அங்கீகரிக்கும் என நம்புகிறேன். சில வட்டாரங்களில் இது ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.

