சிங்கப்பூரின் மத்திய சேம நிதிக்கு (மசே நிதி) தற்போது உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு நாடுகளின் ஓய்வுக்காலக் கணக்கு சேமிப்பு குறித்து மெர்சர் அமைப்பு 2009ஆம் ஆண்டு முதல் தரநிலைகளை வெளியிட்டு வருகிறது.
இவ்வாண்டுக்கான தரவரிசையில் மத்திய சேம நிதிக்கு ‘ஏ’ தரநிலை கிடைத்துள்ளது. இதன்மூலம் ஆசிய பசிபிக் வட்டார நாடுகளில் ‘ஏ’ தரநிலை பெற்ற முதல் நாடாகச் சிங்கப்பூர் உருமாறியுள்ளது.
2023, 2024ஆம் ஆண்டுகளில் மத்திய சேம நிதிக்கு ‘பி+’ தரநிலை கிடைத்தது. 17 ஆண்டுகளில் முதல்முறையாகச் சிங்கப்பூருக்கு ‘ஏ’ தரநிலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டுக்கான தரநிலைகளில் நெதர்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், இஸ்ரேல் ஆகிய நாடுகள் ‘ஏ’ பிரிவில் உள்ளன.
ஓய்வுக் கால நிதி கட்டமைப்பின் நிலைத்தன்மை, அனுகூலம், நம்பிக்கை, வலுவான திட்டம் ஆகியவற்றைக் கணக்கிட்டு மெர்சர் அமைப்பு ‘ஏ’ தரநிலையை வழங்கும்.
மத்திய சேம நிதி அதன் கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்று மெர்சர் குறிப்பிட்டது. காலத்திற்கு ஏற்ப ஓய்வுக் கால நிதித் திட்டத்தை மாற்றியமைத்து ஓய்வுக் காலத்தில் உள்ள முன்னாள் ஊழியர்களுக்குப் போதுமான நிதியை அது கொடுக்கிறது என அமைப்பு கூறியது.
இவ்வாண்டு மொத்தம் 52 நாடுகள் மற்றும் நகரங்களின் ஓய்வுக்காலக் கணக்கு சேமிப்பு கட்டமைப்பை மெர்சர் கணக்கிட்டது. அதில் மலேசியா, ஹாங்காங்கும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் அதன் குடிமக்களுக்கும், நிரந்தர வாசிகளுக்கும் மத்திய சேம நிதிக் கணக்கு கட்டாயம். மத்திய சேம நிதியைக் கொண்டு அவர்கள் வீடு, மருத்துவம், ஓய்வுக்காலச் சேமிப்பு நிதி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
மத்திய சேம நிதிக் கணக்கு உள்ளவர்கள் 65 வயதைத் தாண்டிய பிறகு அவர்கள் சிபிஎப் லைப் திட்டத்திலும் சேரலாம். அது ஓய்வுக் காலத்தில் சேமிப்புகள் குறைந்தாலும் சீரான வருமானத்தை வழங்க உதவும்.