ஹவ்காங்கில் உள்ள சீன உணவகமொன்று கோழி சூப்பில் புழுக்கள் இருந்ததற்கு மன்னிப்புக் கேட்டுள்ளது.
29 வயது திரு லியோன் வீ, தாம் உட்கொண்ட ‘கோழி சூப்’ உணவில் பல புழுக்கள் இருந்ததைக் கண்டதாகச் சொன்னார். தொடக்கத்தில் உணவக ஊழியர்கள் தாம் கூறியதைக் கண்டுகொள்ளவில்லை என்றார் அவர்.
பின்னர் நோயுற்றதாக அவர் சொன்னார். வயிற்று வலி ஏற்பட்டதாகவும் வாந்தி எடுத்ததாகவும் திரு வீ கூறினார்.
திரு வீ வெளியிட்ட டிக்டாக் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவியது. மூன்றே நாளில் அது 4,600க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டது. காணொளி 350க்கும் அதிகமான கருத்துகளையும் ஈர்த்தது.
உணவகம் திரு வீயைத் தொடர்புகொண்டு மன்னிப்புக் கேட்டது. $128 இழப்பீடு கொடுக்கவும் அது முன்வந்தது.
காணொளியை அகற்றும்படி உணவகம் கேட்டுக்கொண்டதாகவும் திரு வீ சொன்னார். ஏஷியாஒன் (AsiaOne) ஊடகத்திடம் அவர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
ஜூலை 30ஆம் தேதி ஹவ்காங் கிரீன் கடைத்தொகுதியில் உள்ள சீன உணவகமொன்றில் இரவு சுமார் 9 மணிக்குச் சம்பவம் நடந்தது. தமது தோழியுடன் உணவருந்தியபோது சூப்பில் 15 முதல் 20 புழுக்கள் வரை இருந்ததைப் பார்த்ததாகத் திரு வீ சொன்னார்.
“மிகவும் அருவருப்பாக இருந்தது. உணவுக்குள் பல புழுக்கள் கிடந்தன. என்னுடைய காணொளி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.
உணவகத்தின் பொறுப்பற்ற செயலை இணையவாசிகள் சாடினர். இத்தகைய உணவகங்களின் தவறுகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
சிங்கப்பூர் உணவு அமைப்பு அந்த விவகாரத்தை விசாரிப்பதாகக் கூறியது. உணவுப் பாதுகாப்புக்குக் கூட்டாகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
உணவகங்களை நடத்துவோர் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உணவு அமைப்பு தெரிவித்தது. உணவு ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுவதையும் வளாகம் தூய்மையாக இருப்பதையும் அவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அமைப்பு நினைவூட்டியது.
துப்புரவுப் பணிகளுக்காக உணவகம் ஜூலை 31ஆம் தேதி மூடப்பட்டிருந்தது. உணவக ஊழியர்களுக்கும் மறுபயிற்சி அளிக்கப்பட்டது.
சம்பவம் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்கச் சம்பந்தப்பட்ட கோழி சூப் உணவைப் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டதாக உணவகம் தெரிவித்தது.