புதுப்பிப்புப் பணியால் மகா சிவராத்திரி விழா சிறிய அளவில் நடத்தப்படும்

2 mins read
26e1fc1f-f155-4433-8646-4ec3f207ce74
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயில். - கோப்புப் படம்

கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா அடுத்த வாரம் புதன்கிழமை (பிப்ரவரி 26) நடைபெறவுள்ளது.

வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள திருக்குட நன்னீராட்டு விழாவிற்காக ஆலயத்தில் தற்போது புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் மகா சிவராத்திரி விழா சிறிய அளவில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) காலை 6 மணி வரை நான்கு காலப் பூசைகள் நடைபெறும்.

இரவு 7 மணி, 10 மணி, 1 மணி, அதிகாலை 4 மணி ஆகிய நேரங்களில் அந்நான்கு காலப் பூசைகளும் இடம்பெறும்.

இறை மூர்த்தங்கள் தற்காலிகமாகக் குடிகொள்ளும் சிறிய இடத்தில் பெருங்கூட்டத்திற்குப் போதிய இடம் இல்லாததால் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 20 பேர் மட்டும் உள்ளே நுழைந்து பால்குடம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.

இரவு ஏழு மணி முதல், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பால் குடங்கள் கிடைக்கப்பெறும்.

ஆத்மலிங்கத்தை வழிபட அனுமதிக்கப்படமாட்டாது. அத்துடன், கண்காட்சிகளோ பண்பாட்டு நிகழ்ச்சிகளோ இடம்பெறாது.

இரவு நேரம் முழுவதும் கோவிலில் தங்கியிருந்து கண்விழிக்க பக்தர்கள் இம்முறை இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான ‘பிரசாதம்’ எனப்படும் திருவமுது, கோவிலுக்கு எதிரே உள்ள கூடாரத்தில் வழங்கப்படும்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முரசிடம் தெரிவித்த ஆலயத் தலைவர் அ.யோகநாதன், அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி ஆலயம் சார்பாகக் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.

“கடந்த முறை 40,000 பக்தர்கள் வந்திருந்தனர். இம்முறை பக்தர்களின் எண்ணிக்கை அதில் பாதி அளவு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் திரு யோகநாதன்.

கோவிலுக்குள் நுழைவதற்கு மூத்தோருக்கும் உடற்குறை உள்ளோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களுடன் ஒரே ஒரு பெரியவர் செல்வதற்கு அனுமதி உண்டு. உதவி தேவைப்படுவோர் தொண்டூழியர்களை அணுகலாம்.

குறிப்புச் சொற்கள்