லென்டோர் சென்ட்ரல் பகுதியில் உள்ள கூட்டுரிமைக் குடியிருப்பின் 24வது மாடி சன்னல் விளிம்பில், பணிப்பெண் ஒருவர் ஆபத்தான முறையில் நின்று சன்னலைத் துடைத்துக்கொண்டிருந்தது குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மே மாதம் 14ஆம் தேதி காலை 10 மணியளவில் ‘லென்டோர் மாடர்ன்’ குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் குறுகிய சன்னல் விளிம்பில் பணிப்பெண் ஒருவர் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி நின்று கொண்டு, நீளமான கைப்பிடி கொண்ட துடைப்பானால் சன்னலின் வெளிப்பகுதியைத் துடைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியும் படங்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பகிரப்பட்டன.
உயர் மாடி சன்னல் விளிம்பில் பணிப்பெண் வேலை செய்துகொண்டிருந்ததைப் பார்த்து கூட்டுரிமைக் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்து, அப்பணிப்பெண்ணின் பாதுகாப்பு குறித்து தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டுப் பணிப்பெண்ணின் நிலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பணிப்பெண்களின் பாதுகாப்புக்கும் நல்வாழ்விற்கும் முதலாளிகளே எப்போதும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அமைச்சு நினைவூட்டியுள்ளது.
வேலை நியமனச் சட்டத்தின்கீழ், பணிப்பெண்களுக்குப் பாதுகாப்பான வேலைச் சூழலை வழங்க வேண்டியது முதலாளிகளின் சட்டபூர்வக் கடமையாகும். இச்சட்ட விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அத்துடன், அவர்கள் மீண்டும் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

