நினைவாற்றல் இழந்த மூதாட்டியைக் கடித்ததாகப் பணிப்பெண் ஒப்புதல்

2 mins read
b3f8244a-0365-42a7-9f9c-24e63f13e0c9
மனவுளைச்சல் காரணமாக மூதாட்டியைத் தாக்கியதாக கியால் கியால் துன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். - படம்: பிக்சாபே

நினைவாற்றல் இழந்த பெண்ணைக் கடித்ததாக மியன்மாரைச் சேர்ந்த 39 வயது பணிப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றம் புரிந்தபோது 90 வயதுக்கும் 100 வயதுக்கும் இடைப்பட்ட தம்பதிகளின் பணிப்பெண்ணாகப் கியால் கியால் துன் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

நினைவாற்றல் இழந்த தம்பதியரைப் பார்த்துக்கொள்ள அவர்களது பேரன் அப்பணிப்பெண்ணை வேலையில் அமர்த்தியதாகக் கூறப்படுகிறது.

நடமாடவும், சாப்பிடவும் மூதாட்டிக்குப் பிறரின் உதவி தேவைப்பட்டதாகவும் அவர் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் தெரிவக்கப்பட்டது.

அந்த வயதான தம்பதியர் இருவரும் அணையாடை (டயப்பர்ஸ்) அணிபவர்கள்.

மூதாட்டியின் கணவர் கைத்தடியைக் கொண்டு நடப்பவர்.

அவருக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று மூதாட்டியை கியால் கியால் துன் கடித்ததாகக் கூறப்படுகிறது.

இரவு 10.20 மணி அளவில் முதியவர் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவரை கியால் கியால் துன் தூக்கிவிடவில்லை.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு அந்த முதியவர் தரையில் கிடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்நேரத்தில் மூதாட்டியைத் தூக்கி சொகுசு நாற்காலியில் உட்கார வைத்தார் கியால் கியால் துன்.

மூதாட்டியின் வாயை தமது கையால் மூடி சொகுசு நாற்காலி மீது அவரது தலையை கியால் கியால் துன் அழுத்தியதாக அறியப்படுகிறது.

மூதாட்டியின் கைகளைப் பிடித்து, அவற்றைப் பயன்படுத்தி அவரது முகத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

மூதாட்டி உதவி கேட்டு அலறியதாகவும் தாம் இறந்துவிடக்கூடும் என்று பணிப்பெண்ணிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், தாக்குதலைப் பணிப்பெண் தொடர்ந்தார்.

ஒருகட்டத்தில் தமது கணவர் இருந்த படுக்கையறைக்கு மூதாட்டி நகர்ந்துச் சென்றார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து, மூதாட்டியை படுக்கையறையிலிருந்து வெளியே இழுத்துச் சென்ற கியால் கியால் துன், அவரை சொகுசு நாற்காலி மேல் தூக்கி வீசி அவரது வலது கையைக் கடித்ததாக அறியப்படுகிறது.

மூதாட்டியின் கழுத்தை நெரித்து சொகுசு நாற்காலி மீது அவரது தலையை பலமுறை மோதியதாகக் கூறப்படுகிறது.

கியால் கியால் துன்னின் இச்செயல்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.

அதைப் பார்த்த தம்பதியரின் பேரன் ஜனவரி 4ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார்.

மூதாட்டி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்குப் பல காயங்கள் ஏற்பட்டிருந்தன.

பிப்ரவரி 17ல் கியால் கியால் துன் கைது செய்யப்பட்டார்.

மனவுளைச்சல் காரணமாக மூதாட்டியைத் தாக்கியதாக கியால் கியால் துன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜூன் 4ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.

குறிப்புச் சொற்கள்